×

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு,..5 டிஎம்சி கிடைக்க வாய்ப்பு,..அதிகாரி தகவல்

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து நாளை மாலை தண்ணீர் திறக்கப்படவுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும். அதன்படி முதல்தவணை காலத்தில் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், இரண்டாவது தவணைகாலத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும். ஆனால், ஒப்பந்தப்படி ஆந்திரா முழுமையாக தண்ணீர் தந்ததில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தவணைக்காலம் தொடங்கியது. இந்த தவணை காலத்தில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி தண்ணீர் திறக்க ஆந்திரா மறுத்து விட்டது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆந்திராவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.  இதையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து தண்ணீர் திறக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா வழியாக கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 11.1 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இந்த அணையில், 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு திறந்து விடலாம். அதன்படி கண்டலேறு அணையில் இருந்து நாளை (செப்.25ம் தேதி) மாலை 3 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் கலந்து கொள்கிறார்.

தமிழக அரசு சார்பில் சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் ஜார்ஜ் கலந்து கொள்கின்றனர். இந்த தண்ணீர் ஒரு வாரத்தில் தமிழக எல்லையான ஜீரோபாயிண்ட் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 1000 கன அடி வரை திறக்கப்படவுள்ளது. இந்த தவணை காலத்தில் 8 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 5 டிஎம்சியாவது தமிழகத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறும் போது, ‘தற்போது 3.23 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 322 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் 5 மாதங்களுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது’ என்றார்.


Tags : Government of Tamil Nadu ,Kandaleratu Dam ,launch ,opening , Government, kantaleru dam
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...