×

கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை மனுதாக்கல்: அரசிதழில் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக பாஜ வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த தகவலை அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். பாஜ சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, தமிழிசை சவுந்தரராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில்  தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. விதிகளுக்கு முரணாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனையின் போது இந்த ஆட்சேபங்களை தெரிவித்தபோது, தேர்தல் அதிகாரி, அதை நிராகரித்து விட்டார்.  கனிமொழியின் கணவர், மகன் சிங்கப்பூர் பிரஜைகள். அவர்களின் வருமான விவரங்களை தாக்கல் செய்யவில்லை. சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவு சான்றிதழை அவர் வேட்புமனுவில் இணைக்கவில்லை. அதனால் இந்த வேட்பு மனு குறைபாடானது. எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் திமுக எம்பி கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் தருமாறு உத்தரவிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுகிறோம்’ என்று கூறி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை தொடர விரும்பவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற மனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். வழக்கு அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.இதேபோல் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சந்தானராமன் என்ற தூத்துக்குடி தொகுதி வாக்காளர்  தாக்கல் செய்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கின் விசாரணையையும் அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்து  உத்தரவிட்டார்.

Tags : Case ,withdrawal ,victory ,Kanimozhi ,Tamil Nadu ,The Gazette , Kanimozhi, Tamil Language, Manatakkal, Rajasidhiil, Icort
× RELATED கொரோனா கண்டுபிடிக்க பொது இடத்தில்...