×

போதை பொருட்களின் தலைநகரமாக மாறும் திருச்சி: விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகளாய் வாழ்வை தொலைக்கும் இளைஞர்கள்

* ‘என் உச்சி மண்டையில் சுர்ர்றுங்குது’ என சாலையில் தள்ளாடும் இளசுகள்
* பெண்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலால் அச்சம்
* வியாபார போட்டியில் அரங்கேறும் கொலைகள்

திருச்சி: தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதாலும், மற்ற மாநகராட்சி பகுதிகளை ஒப்பிடும்போது திருச்சியில் தண்ணீர் பஞ்சம் அவ்வளவாக இல்லை என்பதால் தமிழகத்தின் 2வது தலைநகராக திருச்சியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் ஓரளவு முன்னேறியுள்ள திருச்சி மாநகரம் இப்போது போதை சாம்ராஜ்யத்தின் தலைநகராகும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வழக்கமாக போதை என்றால் தமிழகத்தை பொருத்தவரை கள்ளு, சாராயம், விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற ஐஎம்எப் எல் சரக்குகளையும்,கஞ்சா, அபின் போன்றவை தான் முன்னோடியாக இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி போதையிலும் ஓகோ வென கொடிகட்டி பறக்கிறது வளர்ச்சி. காஸ்ட்லி மது வகைகளும், ஹெராயின், பிரவுன் சுகர் போன்றவைகளும் இப்போது சர்வசாதாரணமாக உபயோகிக்கிறார்கள்.

தங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப விலை உயர்ந்த போதை பொருட்களை உபயோகத்திப்படும் வரும் போதை ஆசாமிகளுக்கு கிடைக்கும் போதையை விட அதிக போதையை மலிவு விலையிலேயே அனுபவித்து தங்கள் வாழ்நாளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு வருவது திருச்சி இளைஞர்கள், சிறுவர்கள் என்றால் நம்புவதற்கு முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் யதார்த்தம் அது தான். திருச்சியில் அடிமட்ட விலையில் நாள் கணக்கில் போதை ஏற்றும் வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கிறது. மிக குறைந்த விலையில் அதிக ‘கிக்’ ஏற்படுத்தும் போதை பொருள் திருச்சியில் தட்டுப்பாடின்றி கிடைப்பது கொடுமையிலும் கொடுமை. கஞ்சா, பிரவுன்சுகர், ஹெராயின் போன்ற போதைகளுக்கு அடிமையாகி மாணவ மாணவிகள் தங்கள் வாழ்வை சீரழித்து வருகின்றனர். தற்போது, ஒரு படி மேலே சென்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஓசிபி என்ற ஒரு ஷீட்டில் அடைத்து,

அதை நன்றாக சிகரெட் போல் சுருட்டில் பற்றி வைத்து புகைகின்றனர். இதை புகைப்பதால் தங்களின் உயிரை சில நாட்களிலேயே இழந்து விடும் அபாயம் உருவாகியுள்ளது. இதை உபயோகப்படுத்தும் இளைஞர்களும் அறியவில்லை. குழந்தைகளின் நிலையை கண்காணிக்காத பெற்றோர்களும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. திருச்சியின் மைய பகுதியான பாலக்கரை, காந்திமார்க்கெட், தென்னூர், காஜாப்பேட்டை, காவிரி கரை பகுதிகளில் உள்ள சிறுவர்கள், வாலிபர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் இவ்வகை புதுப்புது போதையில் தங்களின் வாழ் நாட்களை அவர்களை அறியாமலேயே எண்ணிக் கொண்டுள்ளனர். இதில் உச்சக்கட்டமாக பாலக்கரை காஜாப்பேட்டை, மணல்வாரித்துறை ரோடு, குஞ்சாங்கொலை, தாமோதரன்எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது கழிவறையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

இதனை வாங்கி உபயோகிக்கும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி என்ன செய்கிறோம் என்பதை மறந்து வழிப்பறிஉள்ளிட்ட அனைத்து குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். குஞ்சாங்ககொலை பகுதியில் உள்ள முட்புதரில் கஞ்சாவை இழுத்து கொண்டிருந்த இளைஞர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். அதுபோல், தாமோதரன்எடத்தெருவில் உள்ள பொது கழிப்பிடத்தில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள், கழிவறைக்கு வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ₹3000 பறித்து சென்றனர். இதனால், சாலையில் தனியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். இதில் உச்சக்கட்டமாக கஞ்சா வியாபாரிகள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் கஞ்சா விற்பனையை கண்டு கொள்ளாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் திரண்டு கமிஷனரிடம் மனு அளித்தனர். பல்வேறு வித போதைகளில் திருச்சி இளைஞர்களும், சிறுவர்களும் வழிதவறி தடுமாறும் நிலையில், ஒட்டுமொத்த இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது போதைகளும் வந்து கொண்டிருக்கிறது. ஓசிபி ஸ்லிம் எனப்படும் ஜெர்மன் நாட்டு தயாரிப்பான இந்த மயிரிழைப்போல் உள்ள காகிதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அடைத்து வைத்து எரித்தால் அதில் இருந்து வரும் புகை மூலம் போதை ஏற்படுத்துவதாக கூறி இந்த போதைக்கு தற்போது இளசுகள் அடிமையாகி வருகிறார்கள். ஒரு நிமிடம் இதை புகை போதையை உள்ளுக்குள் உறிஞ்சி ஏற்றிக்கொண்டால் குறைந்த பட்சம் 2 மணிநேரம் போதை அப்படியே நிற்பதாகவும், எந்த வித துர்நாற்றமும் ஏற்படுவதில்லை என்றும், இதனை உபயோகிக்கும் நபர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே பலவித போதை பொருட்கள் நடமாட்டத்தால் சீரழிந்து கிடக்கும் திருச்சியில் இப்போது மேலும் ஒரு நூதன போதை பொருள் வந்திருப்பதை அறிந்த போலீசார், இது என்னடா புது தலைவலியாக உள்ளதே என, பேப்பர் போதை குறித்து விசாரிக்க துவங்கி உள்ளனர். இளசுகளின் வாழ்வை பாதிக்கும் வகையில் புதுவித வகையில் பல்வேறு பொருட்கள் மூலம் போதை பொருள் வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோல் செருப்புகள் தயாரிப்பு மற்றும் பர்னிச்சர்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடை மற்றும் இரும்பு சாமான்கள் விற்கப்படும் கடைகளில் கிடைக்கும் சொலிஷன் வாசனையை உறிஞ்சுகின்றனர். இதில் அவர்கள் உறிஞ்சும் வேகத்தில் இவற்றில் உள்ள கெமிக்கல்கள் மூளை வரைக்கும் ‘சுர்’ என்று சென்று, ‘‘ஏன் உச்சி மண்டையில் சுர்ர்றுங்குது’’ என ஆடத்தொடங்கி விடுகிறார்கள்.

அப்போது ஏற்படும் ரசாயான மாற்றம் சிறிது நேரம் அவர்களை தன்னிலை மறக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. அதன்பின்னர், டப்பாவில் உள்ள செலிஷனில் காற்று பட்டு அவை இறுகும் தன்மைக்கு செல்லும் போது அவற்றை கைகளினால் எடுத்து உருட்டிக் கொண்டு ேராஜா அல்லது மல்லிகை பூவை முகர்ந்து பார்ப்பது போல அடிக்கடி முக்கு அருகில் வைத்து முகர்ந்து மீண்டும் போதையை ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதே போல் பஞ்சருக்கு ஒட்டப்படும் சொலிஷனை நீரில் கலந்து அவற்றை சூடுபடுத்தி அதன் ஆவியை பிடிக்கும் போதும் போதை ஏற்படுகிறது. மேலும், போதை மாத்திரைகள் கேட்டும் மருத்துகடைகாரர்கள் மீது போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்துவதும் ஆங்காங்கே நடக்கிறது. இம்மாதிரியான போதை ஆசாமிகள் காவிரி கரை ஓரமான ஓயாமாரி சுடுகாட்டு பாலம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் உள்ள பாலங்களின் அடியில் இருந்து போதையை அனுபவித்து வருகின்றனர்.

ஏனெனில் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதுவும் ஒரு காரணம். மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆற்றில் துணி துவைக்கும் போதும், குளிக்க வரும் போதும், போதை ஆசாமிகள் கண்ணில் பட்டால் இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களிடம்வம்பு செய்து வருகின்றனர். இந்த புதுப்புது போதைக்கு திருச்சியில் உள்ள சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை மட்டுமல்லாமல், மாணவர் சமுதாயமும் அடிமைகளாக உள்ளது வேதனைக்குரியது. சமீபத்தில் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவ மாணவரும் போதைக்கு அடிமையான தகவல்கள் வெளியானது. போதையை ஒழிக்க வேண்டியது போலீசாரின் கடமை என்றாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிப்பது அதை விட முக்கியமானது. இல்லாவிட்டால் இளைய சமுதாயத்துக்கு எதிர்காலம் மங்கி போகும் ஆபத்து உள்ளது.

காக்கிகளில் சில கருப்பு ஆடுகள்
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு என்ற காவல்துறையில் ஒரு தனி பிரிவே இருக்கிறது. ஆனால், இந்த பிரிவு தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதுதான் அனைவரின் சந்தேகமாக உள்ளது. காரணம், குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக ஒரு சிலர் வீட்டில் வைத்து வியாபாரத்தை படுஜோராக நடத்துகின்றனர். இதை நன்கு தெரிந்தும் சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, போதை தடுப்பு பிரிவில் உள்ள சில போலீசாரே கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து, கையூட்டும் பெறுவதுதான் வேதனையாக உள்ளது.

சமீபத்தில் பெரம்பலூர் டோல்கேட்டில் பிடிபட்ட ஒரு கஞ்சா கும்பலுடன் ஒரு பெண் எஸ்.ஐயுடன் குடும்பம் நடத்தி வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதேபோல், திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் விற்கப்படும் கஞ்சா உள்ளிட்ட் போதை பொருட்களின் விற்பனைக்கு காக்கிளில் உள்ள சில கருப்பு ஆடுகள் உடந்தையாக இருப்பதால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

Tags : capital ,Trichy , Drugs, Trichy, Youth
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...