×

ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்தார். ஆள்மாறாட்டம் வெளியான தகவலை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மாணவன் கல்லூரிக்கு வரவில்லை. இதற்கிடையே இந்த மோசடி பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்ட மாணவனை பிடிக்க தேனி மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக சென்னையை சேர்ந்த மாணவர் என்பதால் சென்னை தண்டையார் பேட்டையில் தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் போது உதித்சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருமே தலைமறைவாக இருந்தனர். அது மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர் அனைவரிடமும் விசாரணையானது தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த உதித்சூர்யா என்பவர் மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்துவிட்டு அதன் பிறகு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் இந்த மும்பை பயிற்சி மையமும் இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு உள்ளதா?, இதில் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விரிவான விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கானது மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கிற காரணத்தினால் இதனை தேனி போலீசார் அடுத்தகட்டமாக சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பதன் அடிப்படையில் தற்போது இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,CBCID , Impersonation, Need Selection, CBCID, Government of Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...