×

கென்யாவில் பள்ளி இடிந்து விழுந்து கோர விபத்து..: இடிபாடுகளில் சிக்கி 7 மாணவர்கள் பலி, பலர் படுகாயம்; மீட்பு பணிகள் தீவிரம்!

நைரோபி: கென்யாவில் பள்ளி இடிந்து விழுந்து ஏற்பட்ட கோர விபத்தில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர். இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, பள்ளியின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த இடிபாடுக்குள் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் 7 மாணவர்களின் உடல்களை கண்டெடுத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மேலும் பல குழந்தைகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோர சம்பவம் குறித்து பேசிய கென்ய அரசின் செய்தித் தொடர்பாளர் சைரஸ் ஒகுனா, பள்ளிக்கூடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட விரிசலில் கட்டிடம் சரிந்தது. இதில் மாணவர்கள் அனைவரும் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் 7 மாணவர்கள் பலியாகினர். 57 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்டிட விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட விபத்து கென்ய தலைநகரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் பலியான மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. கென்ய தலைநகர் நைரோபியில் அனுமதி பெறாமல் சுமார் 40,000 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவை இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags : Kenya ,school collapse ,Nairobi , Kenya, school, collapse, students, dead, Nairobi
× RELATED ரூ.2.88 கோடி தங்கம் கடத்தல் 2 பெண்கள் கைது