×

இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த வழக்கில், கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி இரு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்த அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் முதல்கட்டமாக 3 பேரை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து இரு தினங்கள் கழித்து மீதமுள்ள 14 எம்.எல்.ஏ.க்களை அப்பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதாக ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இவர்களின் தகுதி நீக்கத்தால் காலியான 15 தொகுதிகளில் வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இதனால் அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதி நீக்கத்துக்கு உள்ளாகியுள்ள எம்எல்ஏக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, 2023ம் ஆண்டு இந்த சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் அறிக்கை வெளியாகி விட்டதால் இதை ஒத்திப்போடக்கூடாது. அதேநேரம் தகுதி நீக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என்றார். இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள், இந்த சட்டசபை பதவிக்காலம் முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களைதையும் கேட்ட உச்சநீதிமன்றம், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பதிலளிக்க கர்நாடக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது, இது தொடர்பாக வரும் புதன்கிழமை விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : Karnataka ,speaker ,Supreme Court ,SC , Bypolls, Karnataka, Disqualified MLAs, Speaker, Supreme Court
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...