புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசீம் ரிஸ்வி. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் இருந்து 26 வசனங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘‘இஸ்லாமானது நேர்மை, சமத்துவம், மன்னிப்பு மற்றும் சகிப்பு தன்மை ஆகிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் குரானில் சொல்லப்பட்டுள்ள சில வசனங்களின் தீவிர விளக்கங்கள் காரணமாக மதமானது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிசெல்கின்றது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றது. இதன் அடிப்படையில் குரானில் இருக்கும் 26 வசனங்கள் நீக்கப்பட வேண்டும்’’ என மனுவில் அவர் கோரியிருந்தார். ரிஸ்வியின் இந்த மனுவிற்கு ஏராளமான இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்லாமியரின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி, பெரெய்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் நாரிமன், பிஆர் காவாய் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இது மிகவும் அற்பமான மனு. இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யாதீர்கள்’’ என எச்சரித்தனர். மேலும் 50 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….
The post உச்சநீதிமன்றம் அதிரடி: குரானில் 26 வசனங்களை நீக்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு 50,000 அபராதம் appeared first on Dinakaran.