×

இளம்பெண் சுபஸ்ரீ மரண வழக்கு: மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா... உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஏன் மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர்  விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள், தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர். மேலும், சட்டவிரோத பேனர்கள் வைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு என்ன நஷ்டஈடு வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.  நிவாரணத் தொகையை, தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் காவல்துறை  அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சுபஸ்ரீ மரணத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது பற்றி நாளை மறுதினம் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Youth Subasri ,corporation ,police officers ,government ,deaths ,fossil-wiring workshop ,High Court , The government should expeditiously complete the fossil-wiring workshop to prevent the deaths caused by mudslides:
× RELATED தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்...