×

அய்யனார் கோவில் அணையை தூர்வாராததால் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும் அபாயம்

உசிலம்பட்டி: எழுமலை அருகே உள்ள அய்யனார் கோவில் அணையை பல ஆண்டுகளாக தூர்வாரததால் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள், தொடர்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ளது எம்.கல்லுப்பட்டி அய்யனார்கோவில் அணை. மேற்குமலைத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மலையிலிருந்து வரக்கூடிய நீர்வரத்து ஓடைகளில் வரும் மழைத்தண்ணீர் இந்த அய்யனார்கோவில் அைணயை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த அணை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இந்த அணை வருவாய்கணக்கில் கண்மாய் வயலகம் என்று உள்ளதால் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர் என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது அணையின் உள்பகுதி மேடாக உள்ளதால் மழைக்காலங்களில் வரும் நீரை அணையில் தேக்கமுடியாமல் காட்டுப்பகுதியில் விரையமாகி கொண்டிருக்கிறது. இந்த அணையை நம்பி எம்.கல்லுப்பட்டி, மல்லப்புரம், பெருமாள்பட்டி, அய்யம்பட்டி, எம்.எஸ்.புரம், சேடபட்டி, மீனாட்சிமூப்பன்பட்டி, கோணாம்பட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்கள் இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீரை நம்பி உள்ளன.

இது சம்மந்தமாக பலமுறை இப்பகுதி விவசாயிகள் உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, மாவட்ட ஆட்சியர், தாசில்தார், இதன் மூலம் நீர்வள  ஆதாரத்துறை குண்டாறு வடிநிலகோட்ட பொறியாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால் இது சம்மந்தமாக அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இப்பகுதி விவசாயிகள் தானம் அறக்கட்டளை மூலம் மூன்றில் ஒரு பங்குத்தொகை செலுத்தி அணையில் உள்ள சீமைக்கருவேலமரங்களை அகற்றி சுத்தப்படுத்தினார்கள். அதன் பின்பு இப்பகுதியிலுள்ள பல இடங்களில் குடிமராமத்து பணி என கண்மாய், ஊருணிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் இந்த அணை சம்மந்தமாக எந்தவொரு முயற்சியோ, நடவடிக்கையோ இதுவரை அதிகாரிகள் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த செப்.10ந் தேதி நீர் ஆதாரத்துறை சார்பில் குண்டாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் குருசாமி விவசாயிகளுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 2018-19ல் அய்யனார்கோவில் ஓடையில் குடிமராமத்து பணி நடைபெற்றுள்ளது என்றும், அய்யனார்கோவில் அணை இயற்கையாகவே பாறை மேடாக உள்ளது. இதனை அகற்ற வேண்டியதில்லை. இதனால் இடையூறு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு இப்பகுதி விவசாயிகள் இது தவறான கருத்தாகும், மண்மேடாகத்தான் உள்ளது பாறையாக இல்லை. அதிகாரிகள் நேரிலே வந்தால் நாங்களே ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி காட்ட முடியும் என்கின்றனர்.

இதுசம்மந்தமாக எம்.கல்லுப்பட்டி விவசாயி ராமர் கூறும்போது, ‘‘இந்த பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளுமே இந்த அய்யனார்கோவில் அணையை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறோம். இதனை தூர்வாரினால் சிறிதளவு மழை பெய்தால் கூட தண்ணீர் தேக்க முடியும். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறையாது. எனவே அதிகாரிகள் உண்மை நிலையை தெரிந்தும், இப்பகுதி விவசாயிகளில் நிலைமையை எண்ணியும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
இதேபோல் காளியப்பன் கூறும்போது, ‘‘எங்கள் பகுதி விவசாயிகளின் ஒவ்வொரு நீர் ஆதாரங்களும் தொடர்ந்து அழிக்கப்பட்டும், உருவாக விடாமல் தடுக்கப்பட்டும் வருகிறது. அதில் குறிப்பாக பல ஆண்டுகளாக விவசாயிகளின் நீண்டகால கனவுத்திட்டமான டேராபாறை அணைத்திட்டம் இன்னும் கனவாகவே கிடக்கிறது. மேலும் நீர்வரத்து ஓடைகள் அனைத்தும் தனிநபர் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் நீர்தேக்கங்களில் தண்ணீர் தேக்கம் இல்லாமல் போகிறது. இதேபோல் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமான அய்யனார்கோவில் அணை தூர்வாரப்படவேண்டும். இதற்கு சம்மந்தப்பட்டதுறை மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார். இது சம்மந்தமாக இப்பகுதியிலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் இந்த அணை தூர்வாரப்படும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Tags : land ,lands ,Usilampatti ,Ayyanar Kovil Dam , Usilampatti, agricultural lands
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...