×

பாபநாசம் அருகே கழிப்பறை வசதி இன்றி கிராம மக்கள் அவதி

பாபநாசம்: பாபநாசம் அருகே மட்டையான்திடலிலிருந்து கோயிலாம்பூண்டிக்கு செல்லும் சாலையில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பறை வசதியில்லாமல் வயல்வெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளதால் திருவையாத்துகுடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றனர். பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோயிலாம் பூண்டி கிராமம் உள்ளது. பாபநாசம்-சாலியமங்கலம் மெயின் சாலையிலிருந்து மட்டையான் திடல் வழியாக உள்ளே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோயிலாம்பூண்டி உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மட்டையான் திடலிலிருந்து கோயிலாம் பூண்டிக்கு செல்லும் சாலை பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் சாதாரணமானவர்கள் என்பதால் நடந்துதான் மெயின் சாலைக்கு வருகின்றனர். பழுதடைந்த இந்த சாலையில் நடந்துச் செல்ல முடியாமல் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் அவதிப்படுகின்றனர். பெய்தால் இந்த சாலையில் நடந்துச் செல்லவே முடியாது. இதேபோன்று கோயிலாம் பூண்டி செல்லும் சாலையின் ஒரு புறத்தில் வசிக்கும் 150 குடும்பங்களில் சில வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.

மீதமுள்ளவர்கள் கொல்லை, வயல் வெளிகளில் தான் இயற்கை கடனை கழிக்கின்றனர். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், இங்கு வசிப்பவர்கள் சாதாரண கூலித் தொழிலாளர்கள். இந்த சாலையின் ஒரு புறத்தின் வழியாகச் செல்லும் சின்ன வாய்க்காலை தூர் வாருவதே இல்லை. தூர்வாரி பத்து வருடத்திற்கு மேலாகிறது. இந்த வாய்க்காலை நம்பி 5 வேலி பாசனப் பரப்பு உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயமே எங்களுக்கு விட்டுப் போனது. இங்கு வரும் தண்ணீர்கூட சுத்தமாக இல்லை. குளித்தால் அரிப்பு ஏற்படுகிறது. குப்பைகளை அள்ளாத காரணத்தால் சேரும் குப்பைகளை எரிக்கின்றோம் என்கின்றனர். மாவட்ட நிர்வாகம்தான் அம்மாப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த திருவையாத்துக்குடி ஊராட்சியைச் சேர்ந்த எங்கள் கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்றனர்.

Tags : toilet facilities ,Papanasam , Papanasam, toilet facilities, villagers
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!