×

வேலூர் மத்திய சிறையில் ரோஜா தோட்டம் அமைப்பதற்காக சோதனை முறையில் செடி வளர்ப்பு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் நன்னடத்தை கைதிகள் மூலம் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு சிறை வளாகத்தில் 2 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, அதில் விளைந்த காய்கறிகள் கைதிகளுக்கான உணவுக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதற்கான செலவினம் கணிசமாக குறைந்தது. இதனால் காய்கறி தோட்டம் 4 ஏக்கராக விரிவுப்படுத்தப்பட்டது. இதில் விளைந்த காய்கறிகள் சிறைச்சாலை தேவைக்குப்போக மீதமாகும் காய்கறிகள் சிறை பஜார் மூலம் வெளியில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் வேலூர் சிறைகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் ஆலை ரூ.2.64 கோடியில் அமைக்கப்பட்டு, அதில் இருந்து வெளியேறும் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறை சுற்றியுள்ள காலியிடங்களில் நிலக்கடலை, கத்தரிக்காய், தக்காளி என குறுகிய கால பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், அத்துடன் கொய்யா, நெல்லி மரங்கள் நடப்படுவதுடன், மூலிகை தோட்டம் அமைக்கப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ரோஜா தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தை பசுமையாக மாற்றும் பணியில் கொய்யா, நெல்லி மரக்கன்றுகள் நடப்படுகிறது. தற்போது, ரோஜா தோட்டம் அமைப்பதற்காக 50க்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் சோதனை முறையில் வளர்க்கப்படுகின்றன. இவை நல்ல பலனை தந்துள்ளதால், ரோஜா தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சிறைக்குள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது’ என்றனர்.

Tags : rose garden ,Central Prison ,Vellore Central Prison Vellore , Vellore, Central Prison
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்