×

ராஜஸ்தானில் இருந்து வரத்து குறைந்ததால் தூத்துக்குடி மார்க்கெட்டில் பூண்டு விலை 3 மடங்கு உயர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மார்க்கெட்டுகளில் பூண்டு விலை 3 மடங்கு அதிகரித்து ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது. தூத்துக்குடி மார்க்கெட்களுக்கு தேனி, நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூண்டு வருகிறது. இவை தவிர தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் பூண்டு வரத்து உள்ளது. கடந்த சில மாதமாகவே வரத்தும் தேவையும் சரிநிலையில் இருந்ததால் பூண்டு கிலோ ரூ.60 முதல் 70 வரையில் விற்பனையானது. தற்போது ராஜஸ்தான் பூண்டு வரத்து திடீரென குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம், பெரியகுளம் மார்க்கெட், கொடைக்கானல் மலைப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே பூண்டு வரத்து உள்ளது. இதனால் பூண்டு விலை கடந்த இருவாரங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறிது சிறிதாக அதிகரித்து வந்த பூண்டின் விலை தற்போது கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரையில் விற்பனையாகிறது. ஒரு சில வாரங்களிலேயே பூண்டின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் மேலும் ஓரிரு வாரங்கள் நீடிக்கும் என்றும் அடுத்த மாதத்தின் துவக்கத்தில் ராஜஸ்தான் பூண்டு வரத்து துவங்கினால் விலை குறையவாய்ப்புள்ளது என்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல தூத்துக்குடிக்கு பெங்களூரு, பெல்லாரி பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பல்லாரி வருவது வழக்கம். கடந்த வாரம் வரையில் பல்லாரி கிலோ ரூ.20 முதல் ரூ.30க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் கடந்த சீசனில் போதிய மழையின்மை காரணமாக பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாரி விளைச்சல் குறைந்தது. இதனால் வரத்து இல்லாத நிலையில் பல்லாரி, வெங்காயம் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வந்த பல்லாரி தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.60 வரையில் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வரத்து இருந்தால் மட்டுமே பல்லாரி விலை குறைய வாய்ப்புள்ளது. இதுபோல் வெங்காயத்தின் விலையில் தொடர்ந்து அதிகரித்து ரூ.50 முதல் 60 வரை விற்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Tags : times ,Thoothukudi ,Thoothukudi Market , Garlic Price, Thoothukudi Market
× RELATED ஒருமுறை, 2 முறையல்ல 72 முறை பாம்புகள் கடித்தும்உயிர் வாழும் அதிசய மனிதர்