×

தமிழர்கள் உலகை ஆட்சி செய்திருப்பார்கள்: பழநியில் ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டு மானுடவியலாளர் பிரமிப்பு

பழநி: ‘ஐரோப்பியர்களின் வருகை மட்டும் இல்லாதிருந்தால் உலகத்தையே தமிழர்கள் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருப்பர். கடல் ஆதிக்கத்திலும் பழந்தமிழர்களே முன்னோடியாக இருந்தனர்’ என பழநி பகுதியில் ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் பிரமிப்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ரொமைன் சிமினல் (43). மானுடவியல் ஆய்வாளராக உள்ளார். மனித இனப்பரவல் குறித்து உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்தவர், கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதி மக்களிடம் ஆய்வு நடத்தினார். நேற்று முன்தினம் பழநி வந்தார். பழநி அருகே இரவிமங்கலத்தில் உள்ள பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள், பாப்பம்பட்டி பகுதியில் உள்ள குகை ஓவியங்களை நேற்று பார்வையிட்டார். அதன் காலங்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவருக்கு எடுத்துரைத்தார்.

பின்னர், நிருபர்களிடம் மானுடவியலாளரான ரொமைன் சிமினல் கூறியதாவது: எனது ஆய்வுகளின்படி, எனது கருத்தாக பதிவு செய்ய விரும்புவது, உலகம் முழுவதும் திராவிடர்கள் (தமிழர்கள்) பரவிக் கிடந்துள்ளனர். ஐரோப்பியர்களின் வருகை மட்டும் இல்லாதிருந்தால் உலகத்தையே தமிழர்கள் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருப்பர். எகிப்தியர்களின் உருவ அமைப்பு, தமிழர்களின் உருவ அமைப்புடன் ஒத்துப்போகின்றன. தமிழர்கள் அணியும் வேஷ்டி போன்ற ஆடைகளையே, அவர்களும் அணிகின்றனர். என்னுடைய கருத்தின்படி பண்டைய எகிப்தியர்கள் தமிழ்குடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். எகிப்தில் கிரேக்கர்களின் ஆதிக்கம் இல்லாதிருந்தால் பழந்தமிழர்களின் பரவல் குறித்து விவரங்கள் தெரிந்திருக்கும். எகிப்தில் இறந்தவர் உடலை பதப்படுத்த ஏலக்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலத்தில் தமிழர்களே ஏலக்காய் போன்ற நறுமண பண்டங்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதன் மூலம், எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்குமிடையே இருந்த வணிகத் தொடர்புகளை தெரிந்து கொள்ளலாம். ஆஸ்திரேலியா, மலேஷியா, ஜாவா, சுமத்ரா, இலங்கை, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் மக்களின் மரபணுக்கள், தமிழர்களின் மரபணுக்களை ஒத்திருக்கின்றன. இவை இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இப்பகுதிகளில் தமிழர்களின் இனப்பரவல் இருந்திருப்பது உறுதியாகிறது. ஐரோப்பியர்களின் மரப்பணுக்களில் கூட ஒரு சதவீதம் அளவிற்கு தமிழர்களின் மரபணுக்கள் ஒத்து இருக்கிறது. ஆப்பிரிக்க பழங்குடிகளை பண்டைய தமிழ்குடிகள் விவசாய தொழிலில் பயன்படுத்துவதற்காக அழைத்து வந்திருக்கலாம். விழுப்புரம் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களின் மரபணுக்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்களின் மரபணுக்களுடன் ஒத்துப்போகின்றன. இவற்றின் மூலம், கடல் ஆதிக்கத்தில் பண்டைய தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளனர். ஐரோப்பிய மற்றும் கிரேக்க ஆதிக்கத்திற்கு முன்பு தமிழர்களின் ஆதிக்கம் உலகளவில் இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamils ,Palani ,world ,French ,France ,Europeans , Palani, France, Europeans
× RELATED பாஜ தலைவர் முருகன் பழநியில் கைது