×

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று காலை சந்திக்கிறார் சோனியா காந்தி; மன்மோகன் சிங்கும் செல்கிறார்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தால் கடந்த மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் சிபிஐ அவரை கைது செய்தது. 4 முறை சிபிஐ காவலில் வைத்து  விசாரிக்கப்பட்ட பின்னர் கடந்த 5ம் தேதி 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு திகார் சிறையின் 7வது பிளாக்கில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் கடந்த 19-ம் தேதி பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின்  கூடுதல் சொலிசிட்டர் துஷார்மேத்தா வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு இந்த மாதம் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலை மேலும் நீட்டிக்க வேண்டும். மேலும் அவருக்கு உடல்நிலை சரியான சூழலில் இல்லை என  தெரிவிக்கின்றனர். குறிப்பாக ப.சிதம்பரத்தின் உடல்நிலையில் சிபிஐக்கும் அக்கறை உண்டு. அதனால் இந்த விவகாரத்தில் அவர்களது குற்றச்சாட்டை ஏற்கமுடியாது’’ என வாதிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்களது வாதத்தில், “விசாரணை கைதியாக இருக்கும் ஒருவருடைய நீதிமன்ற காவல்  முடிந்துவிட்டால், மீண்டும் அவருக்கு நீதிமன்ற காவல் தான் வழங்க வேண்டும் என்று இல்லை. அவரை வெளியிலும் விடலாம். அதில் எந்த தவறும் இல்லை. இதில் சிபிஐ தரப்பில் இந்த மாதம் 30ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க  வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கான மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு அனுமதி வழங்க கூடாது. குறிப்பாக இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவானது வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதனால் அடுத்த 4 நாட்கள் வரை  வேண்டுமானால் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் கொடுங்கள். மேலும் அவரது வயது முதிர்வை கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், “ப.சிதம்பரத்திற்கு வரும் அக்டோபர் 3ம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது. மேலும் அவர் வங்கி தொடர்பான ஆவணங்கள் மற்றும் நாடாளுமன்ற அனுமதி அட்டை புதுப்பித்தல் செய்ய  ஆகியவற்றில் கையெழுத்திட எந்த தடையும் கிடையாது. மேலும் ப.சிதம்பரத்திற்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அவருக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது’’ என்றார். இதையடுத்து  ப.சிதம்பரம் உடனடியாக போலீசாரால் திகார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று காலை 9 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பின்போது,  காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்படலாம் என்று கருதப்படுகிறது.


Tags : Sonia Gandhi ,Delhi ,P Chidambaram ,Manmohan Singh ,Tihar jail , Sonia Gandhi meets P Chidambaram in Delhi's Tihar jail Manmohan Singh goes
× RELATED விசாரணை அமைப்புகளை தவறாக...