×

ஏழை மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும்: எஸ்டிகே.ராஜன், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பள்ளிகள் மேலாளர்

தமிழகத்தில் கல்விக்கண் திறந்தவர் என்று அனைவராலும் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரால் 17 ஆயிரம் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. அப்படி தான் கல்விக்கு வித்திடப்பட்டது; வளர்க்கப்பட்டது; இது போதாதென்று, கல்வி கற்க  ஈர்க்க வேண்டும் என்பதால் மக்களின் வறுமை கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்று நினைத்தார்; அதன் பலன் தான்  மாணவர்கள் பசியாற மதிய உணவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால், அன்று ஏழை மாணவர்கள் பள்ளிக்கூடம்  செல்ல ஆரம்பித்தனர்.
இந்த கல்வித்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக டாக்டர் எம்ஜிஆர் உலகத்திற்கே முன்னோடியாக சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார். டாக்டர் கலைஞர் சத்துணவுத்திட்டம் சத்தான திட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக  சத்துணவோடு முட்டையினை வழங்க திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் அதை செயல்படுத்தி கல்வித்துறைக்கு பெருமை சேர்த்தார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தினம்தோறும் முட்டையுடன் ஊட்டசத்து நிறைந்த பயிர்வகைகளையும் மதிய உணவில் சேர்த்தார். இவைகள் எல்லாம் ஏழை மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும்  ஏற்படுத்தப்பட்டவை.

பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைவாக இருக்கக் கூடாது, உணவுக்காகவாவது மாணவர்கள் பள்ளிக்கு வந்தால்,  இதோடு 2005ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்ற சட்டத்தின் மூலமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும், வயது வந்தோருக்கும் கல்வி வழங்க முடிவு  செய்யப்பட்டது; அதற்காக வயது வந்தோருக்கான வகுப்பு என்ற சட்டம் மூலமாக மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக குறைந்தது. இதனால், அனைத்து ஏழை மாணவர்களும் கட்டாயமாக கல்வி கற்று வருகின்றனர். மாணவர்கள்  மேல்வகுப்பிற்கு செல்ல தகுதி உடையவர்களாகி வருகின்றனர். கீழ் வகுப்பில் விளையாட்டு பிள்ளைகளாயிருந்தாலும் மேல்வகுப்பில் தங்களது பொறுப்பை உணர்வு படித்து வெற்றி பெற்று சரித்திரத்தில் தடம்பதித்து வருகின்றனர்.

கிராம பள்ளிகளில் படித்துத்தான் விஞ்ஞானியாக இருந்து, ஜனாதிபதியான அப்துல்கலாம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் சாதனை படைத்தனர். தற்போதைய அரசின் 5,8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உள்ளத்தில் ஒரு விதமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பொதுத்தேர்வுகளை சந்திக்கும்  மாணவர்களின் மனஅழுத்தம் எப்படியிருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். இந்த அறிவிப்பால் என்ன விளைவு ஏற்படும் தெரியுமா? புதிய கல்விக்கொள்கையால், பொதுத்தேர்வை சந்திக்கும் அச்சம், பீதி அதிகரித்து, கடைசியில்  ஏழை மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், ஏழை  மாணவர்கள் தங்களது தந்தையின் தொழிலுக்கே செல்லும் சூழல் உருவாகக்கூடும். உளவியலாளர்களின் கருத்துப்படி சிறு வயதிலேயே பொதுத்தேர்வு என்பது இளஞ்சிறார்களின் மனதில் ஒரு வித குழப்பத்தையும் கலக்கத்தையும் உண்டாக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

எனவே, தமிழக அரசு தற்போது  5,8ம் வகுப்புகளுக்கு அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவித்ததை நிரந்தரமாக 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவிக்க வேண்டும் இதன் மூலம் இளஞ்சிறார்கள் மனதில் மகிழ்ச்சியும் தொடர்ந்து  உயர்கல்வி பயில வாய்ப்பாக அமையும். சமதர்ம சமுதாயம் மலர அனைவருக்கும் கல்வியும் உழைப்பும் போதுமானது என்று பெருந்தலைவர் காமராஜர் கூறியிருக்கிறார். அதை இந்த அரசு செயல்படுத்துவதன் மூலம் கல்வி அனைவருக்கும்  பொதுவானது என்ற நிலை உருவாகும். புதிய கல்விக்கொள்கையால், பொதுத்தேர்வை சந்திக்கும் அச்சம், பீதி அதிகரித்து, கடைசியில் ஏழை மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.


Tags : STK.Rajan ,Nazareth Thirumandala ,Thirumandala ,Tuticorin ,Nazareth ,Thoothukudi , Poor students,suspension, STK.Rajan, Thoothukudi-Nazareth, Thirumandala, Schools Manager
× RELATED நெல்லை திருமண்டல வடமேற்கு சபை மன்ற...