50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்பு ஹூஸ்டனை உலுக்கிய ‘ஹவ்டி மோடி’: பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உரை

ஹூஸ்டன்,: அமெரிக்காவில் பிரதமர் மோடியின் உரையை கேட்க ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சிக்கு சுமார் 50 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் திரள ஹூஸ்டன் நகரமே குலுங்கியது. 3 மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில்,  இந்தியா-அமெரிக்காவின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் வெகுவாக கவர்ந்தன.நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க ஒரு வாரகால பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, டெக்சாஸ்  மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ (நலமா மோடி) என்ற நிகழ்ச்சியை அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக, ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம்  நள்ளிரவு (இந்திய நேரப்படி) சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹூஸ்டனில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்கள், சீக்கிய பிரதிநிதிகள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினர். தனது முதல் நிகழ்ச்சியாக  அமெரிக்க எரிபொருள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின்  தலைமை செயல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் மோடி பங்கேற்றார். இதில் உலகின் முன்னணி நிறுவனங்களாக எமர்சன், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இக்கூட்டத்தில், இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி  நிறுவனம் அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை திரவ எரிவாயு இறக்குமதி செய்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத்தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் தொடங்கியது. அரங்கம் முழுவதும் சுமார் 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் குவிந்திருந்தனர். இந்நிகழ்ச்சி  பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், தூர்தர்ஷன் உள்ளிட்ட பல்வேறு சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.குஜராத்தின் பாரம்பரிய ‘தாண்டியா’ நடனத்துடன் பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு வரவேற்கப்பட்டார். இதில், அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்தை சேர்ந்த சுமார் 1000 கலைஞர்கள் நடனமாடினர். பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும்  இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரு தலைவர்களையும் மிகுந்த கரகோஷத்துடன் அரங்கம் முழுவதும் குவிந்திருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர்.

வாஷிங்டனில் அல்லாமல் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு வேறொரு நகரில் நடப்பது இதுவே முதல் முறை. அதிலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த விழாவில் அதிபர் டிரம்ப் முதல் முறையாக பங்கேற்றதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. நிகழ்ச்சியின் தொடக்கமான அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 கலைக்குழுவை  சேர்ந்த 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ‘இந்திய, அமெரிக்கர்களின் பிணைக்கப்பட்ட கதை’ என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சியை நடத்தினர். இது, இந்திய, அமெரிக்கர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும், அமெரிக்காவின் வளர்ச்சியில்  இந்தியர்களின் பங்கு குறித்தும் விவரிக்கப்பட்டது.

ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 2 பாடல்கள் உட்பட பல்வேறு பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் 30 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு வாழ்த்து  தெரிவித்து பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப்பும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி, இரவு 11.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் நீடித்தது.ஹவ்டி மோடி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, காந்தி மியூசியத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, குஜராத் சமாஜம் மற்றும் சித்தி விநாயகர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து, நியூயார்க் புறப்பட்டு  சென்றார். நியூயார்க்கில் இன்று நடக்கும் ஐநா பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

காஷ்மீரி பண்டிட்களிடம்‘புதிய காஷ்மீர்’ உத்தரவாதம்

ஹூஸ்டன்  நகரில் பிரதமர் மோடி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே அங்கு  வசிக்கும் காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் மற்றும் தாவூதி போரா  சமூகத்தினரை சந்தித்து பேசினார். சீக்கிய பிரதிநிதிகள் குழுவுடன் உரையாடிய  மோடி  அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், போரா சமூகத்தினரை  சந்தித்து பேசினார். அடுத்ததாக காஷ்மீரி பண்டிட்களை சந்தித்த அவர்,  ‘‘காஷ்மீரில் புதிய காற்று வீசுகிறது. நாம் அனைவரும் இணைந்து,  அனைவருக்குமான  புதிய காஷ்மீரை கட்டமைப்போம். காஷ்மீரி பண்டிட்களின் 30  ஆண்டுகால பொறுமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்,’’ என்றார். பிரதமரின் புதிய  காஷ்மீர் உறுதிமொழியால் காஷ்மீரி பண்டிட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

கீழே விழுந்த பூவை எடுத்து உலகையே கவனிக்க வைத்தார்

ஹூஸ்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற அமெரிக்க பிரதிநிதி ஒருவர் பூங்கொத்து ஒன்றை கொடுத்தார். அதில், ஒரு பூ மட்டுமே கீழே விழுந்தது. சற்றும் யோசிக்காமல் பிரதமர் மோடி குனிந்து அந்த பூவை எடுத்துக்  கொண்டார். சுத்தத்தை பற்றி பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, அதை தனது செயலில் செய்து காட்டி உள்ளார். தூய்மை இந்தியா  திட்டத்திற்காக அமெரிக்காவில் விருது பெற உள்ள மோடியின் செயல் சமூக  வலைதளங்களில் பரவி,  உலகையே கவனிக்க வைத்துள்ளது.

Related Stories:

>