×

முதல்வர், 15 அமைச்சர்களை தொடர்ந்து சபாநாயகர் தனபால் உகாண்டா செல்கிறார்: அமைச்சர்கள் காமராஜ், ஓஎஸ்.மணியன் வெளிநாடு பயணம்

சென்னை: சர்வதேச பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் இந்த வாரம் உகாண்டா நாட்டிற்கு செல்கிறார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28ம் தேதி பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 10ம் தேதி தான் சென்னை திரும்பினார். அதே போன்று,  எட்டு அமைச்சர்களும் சென்றனர். இந்த நிலையில்,  அமைச்சர்களை போன்றே பேரவை தலைவர் தனபால் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் சர்வதேச அளவிலான பேரவைத் தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கி வரும் 29ம்  தேதி வரை நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலும் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் வரும் 25ம் தேதி புதன்கிழமை உகாண்டா நாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் சட்டப்பேரவை அலுவலக  உயர் அதிகாரிகள் குழுவும் செல்கிறது. இந்த மாநாட்டில் என்ன தலைப்பின் கீழ் தனபால் உரை நிகழ்த்தப்போகிறார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சட்டப்பேரவை விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், உறுப்பினர்களை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இந்த மாநாட்டின் கருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல நாடுகளில்  இருந்தும் பேரவைத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஹிருதய நாராயணன் தீக்‌ஷித்தும் சர்வதேச பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள பேரவைத் தலைவர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா  வழிநடத்தி அழைத்துச்செல்கிறார். பேரவை தலைவரை தொடர்ந்து அமைச்சர்கள் காமராஜ், ஓஎஸ்.மணியன் ஆகியோர் வெளிநாடு செல்லவுள்ளனர். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அமெரிக்கா செல்கிறார். அவர் உணவு தானியங்களை  சேமிக்க பயன்படுத்தப்பட்டு வரும் நவீன முறைகள் குறித்து ஆராய அமெரிக்கா செல்கிறார். அதே போன்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெளிநாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வரிடம் அனுமதி  கோரியுள்ளார்.


Tags : Kamaraj ,Tanabal ,ministers ,Uganda ,OS Maniyan ,Tanapal ,CM , ministers, Speaker Tanapal,Ministers Kamaraj, OS Maniyan
× RELATED ஒட்டன்சத்தித்தில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு