×

திருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது

திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா இடையே நதிநீர் பிரச்னைகள் குறித்த  இருமாநில முதல்வர்களுக்கு இடையேயான  பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி திருவனந்தபுரத்தில்  நடக்கிறது. தமிழகம், கேரளா இடையே பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு,  நெய்யாறு உள்பட நதிநீர் பிரச்னைகள் இருந்து  வருகின்றன. இது தொடர்பாக  பலமுறை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன,  பொதுப்பணித்துறை அமைச்சர்கள்,  அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை  நடத்தியும் இதுவரை எந்த சுமூகத்  தீர்வும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நதிநீர்  பிரச்னைகளில் தீர்வு  ஏற்படுத்துவற்காக இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில்  பேச்சுவார்த்தை நடத்த  கேரளாவுக்கு, தமிழகம் சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டது. இதை கேரள அரசு  ஏற்றுக்கொண்டது. இதையடுத்து  இரு மாநில முதல்வர்களுக்கு இடையேயான  பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில்  வரும் 25ம் தேதி நடக்கிறது.

இதில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் உள்பட  4 அமைச்சர்கள், கேரள முதல்வர் பினராய் விஜயன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர்  கிருஷ்ணன் குட்டி, 2 மாநில  நீர்ப்பாசன, பொதுப்பணித்துறை அமைச்சர்கள்  கலந்து கொள்கின்றனர்.  கடைசியாக கடந்த 2000ம் ஆண்டில்  முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த  கருணாநிதி, கேரள முதல்வராக இருந்த ஈ.கே.நாயனார் ஆகியோருக்கு இடையே  பேச்சுவார்த்தை நடந்தது. முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இம்முறை நடக்கும்  பேச்சில் இந்த விவகாரம் முன்வைக்கப்பட  மாட்டாது என்று தெரிகிறது. இது தவிர நெய்யாறு, ஆனமலையாறுகளில்  இருந்து கூடுதல் தண்ணீர், பறம்பிக்குளம், ஆழியாறு, சிறுவாணி பிரச்னை,  பாண்டியாறு, குன்னப்புழா ஆறுகளில் புதிய அணை கட்ட அனுமதி, பம்பை, அச்சன்  கோயில் ஆறுகளை திசை திருப்பி தமிழ்நாட்டுக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது  உட்பட பல திட்டங்கள், கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என தெரிகிறது.

Tags : Thiruvananthapuram ,chief minister talks ,Tamil Nadu ,Kerala , Tamil Nadu-Kerala ,chiefs , discuss,river water issue, Thiruvananthapuram
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!