×

நேரு செய்த தவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது: மும்பையில் அமித்ஷா பேச்சு

மும்பை: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு முழு அமைதி நிலவுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலையொட்டியும் 370வது பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாகவும் மும்பையில் நேற்று பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசியதாவது:கடந்த 1947ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வலிமையுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவிக்காமல் இருந்திருந்தால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பிரச்னையே வந்திருக்காது. காஷ்மீரை இந்தியாவுடன் அவர் இணைத்திருக்க வேண்டும். இந்த பிரச்னையை நேருவுக்கு பதிலாக அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் கையாண்டிருக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு அமைதி நிலவுகிறது.  துப்பாக்கிச்சுடும் சத்தம் ஒன்றுகூட அங்கு கேட்கவில்லை. பிரதமர் மோடியின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மத்தியில் பாஜ இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்குவது என்ற முடிவை அவர் தான் எடுத்தார்.சிறப்பு சட்டம் 370வது பிரிவு அரசியல் பிரச்னை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொல்கிறார். ராகுல் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், சிறப்பு சட்டம் நீக்கத்திற்காக பாஜ.வினர் 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர். இது அரசியல் பிரச்னை அல்ல. தேசத்தை ஒன்றாக வைப்பதற்கான எங்களது இலக்கு ஆகும்.ராகுல் காந்தியும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் 370வது பிரிவு நீக்கப்பட்டதை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை மக்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.  இவ்வாறு அமித்ஷா பேசினார்.



Tags : Amit Shah ,Mumbai ,Kashmir ,Nehru , Nehru's mistake, Kashmir issue, Amit Shah talk , Mumbai
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...