×

அங்கன்வாடி மையங்களில் அசாமில் 19.96 லட்சம் போலி பயனாளிகள்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அசாமில் அங்கன்வாடிகளில் 19.96 லட்சம் போலி பயனாளர்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தம் 14 லட்சம் அங்கன்வாடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என மொத்தம் 10 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். அசாம் மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களின் மூலம் பயன் பெறுவோர்கள் குறித்த விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் அளித்த பதில்: அசாம் மாநிலத்தில் மொத்தம் 62,153 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ளன.

இவற்றில்  5  லட்சத்து 94 ஆயிரத்து 296 கர்ப்பிணிகள், தாய்மார்கள் உட்பட மொத்தம் 36 லட்சத்து 24 ஆயிரத்து 973 பயனாளிகள் உள்ளனர். இவர்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் உட்பட 19.96 லட்சம் பேர் போலி பயனாளிகள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அங்கன்வாடி சேவைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநில விவரங்கள் கிடைக்கவில்லை. அங்கன்வாடி சேவை திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆதார் மூலமாக  அடையாளம் காணப்படுகின்றனர். ஆதார் இல்லாத பயனாளிகள், ஆதார் அட்டையை பெறுவதற்கு கள நிர்வாகிகள் உதவுகின்றனர். இவர்கள் ஆதார் அடையாள அட்டையை பெறும்வரை மாற்று அடையாள ஆவணத்தின் அடிப்படையில் அங்கன்வாடி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. போலி பயனாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


Tags : centers ,Assam Anganwadi Centers ,Assam , 19.96 lakh ,fake, beneficiaries , Anganwadi centers, Assam
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!