×

ஆப் சீசன் துவங்கியதால் கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆப் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசி, தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்கள் சீசன் மாதங்களாகும். இந்த கோடை சீசனில் இதமான சூழ்நிலை நிலவும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் வாட்டி வதைக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சீசன் இரண்டாவது சீசன் எனப்படும் ஆப் சீசன். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த சீசன் இருக்கும்.

இரண்டாம் சீசன் காலத்தில் கொடைக்கானலில் இதமான சூழ்நிலை நிலவும். தற்போது இரண்டாம் ஆப் சீசன் துவங்கியுள்ளது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குணா குகை, பிரையண்ட் பூஙாக், மோயர் பாயின்ட், வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரின் மைய பகுதியிலுள்ள ஏரியில் படகு சவாரி செய்தும்,  ஏரிச்சாலையில் சைக்கிள் ஓட்டியும் மகிழ்ந்தனர்.

மேகமூட்டம் காரணமாக பலமணிநேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் தூண்பாறையை கண்டு ரசித்தனர். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைை கொண்டாடப்படுவதால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வட்டக்கானல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Tags : Tour season crowds ,Kodaikanal ,season , Kodaikanal, Tourist Meeting
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...