×

மக்காச்சோளத்திற்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

பழநி: பழநி பகுதியில் மக்காச்சோளத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதி விவசாயிகள் இங்குள்ள அணைகள் மற்றும் குளங்களை நம்பிபேய விவசாயம் செய்து வருகின்றனர். போதிய மழை இல்லாததால் பழநி பகுதியில் கடந்தாண்டு போதிய அளவு விவசாயம் நடைபெறவில்லை. பெரும்பாலான விவசாயிகள் ஒருபோகம் மட்டுமே நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்தனர். இறவை பாசனம் மூலம் பழநி பகுதியில் உள்ள சில விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இவை தற்போது விளைச்சலாகி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரெட்டையம்பாடியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறுகையில், ‘    மக்காச்சோளம் குறுகிய காலப்பயிர் மற்றும் குறைந்த நீர்த்தேவை கொண்டவை என்பதால் பழநி பகுதியில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. அமெரிக்க படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர் கடும் பாதிப்பிற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், கடின உழைப்பு மூலம் மக்காச்சோளம் விளைவிக்கப்பட்டது. ஆனால், மக்காச்சோளம் மூட்டை (100 கிலோ) ரூ.1,300க்கு மட்டுமே விலைபோவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரத்து இருப்பதால் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்’ என்றார்.


Tags : ones , Maize, farmers concern
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை...