×

இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் 98% நிறைவு

புவனேஸ்வர்: சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கம் 98 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். நிலவை  ஆராய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ சமீபத்தில் அனுப்பியது.  இதில், ஆர்ப்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற 3 முக்கிய பாகங்கள் இருந்தன.  நிலவின் சுற்றுவட்டபாதையில் ஆர்பிட்டர் வெற்றிகரமாக சுற்றிக்   கொண்டிருக்கிறது. நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய விக்ரம்  லேண்டருடன் கடைசி நேரத்தில் தகவல் தொடர்பு துண்டானது. தரையிறங்க நிர்ணயம்  செய்யப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விழுந்து கிடந்த   லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவும், நாசாவும் செய்த முயற்சிகள் தோல்வி  அடைந்தன. லேண்டரின் ஆயுட்காலம் மொத்தமே 14 நாட்கள்தான். நேற்று காலையுடன்  அந்த கெடு முடிந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர்  ஐஐடி.யில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் சிவன்  நேற்று சென்றார். அங்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:சந்திரயான்-2ல்  அனுப்பப்பட்ட ஆர்பிட்டர், நிலவை சுற்றி வந்து அறிவியல் சோதனைகளை நன்றாக  மேற்கொண்டு வருகிறது. சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.  இத்திட்டத்தில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன.  ஒன்று அறிவியல்,  மற்றொன்று தொழில்நுட்ப செயல்முறை விளக்கம். 2வது நோக்கம் கிட்டதட்ட  முழுமையான வெற்றி அடைந்துள்ளது. அடுத்தாண்டு மற்றொரு நிலவு ஆராய்ச்சி  திட்டத்தை மேற்கொள்வதில் இஸ்ரோ கவனம்  செலுத்துகிறது. முதலில்  விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இதனுடன் தகவல் தொடர்பு துண்டானதற்கான காரணங்களை இஸ்ரோ நிபுணர்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றனர்.  ஆர்பிட்டரிலுள்ள 8 கருவிகள், அதன் பணியை சிறப்பாக செய்து  கொண்டிருக்கின்றன என்றார்.

விண்வெளிக்கு 2021ல் இந்திய வீரர் செல்வார்
இஸ்ரோ எதிர்கால திட்டம் குறித்து சிவன் கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும். 2021ம் ஜூலை மாதத்துக்குள் 2வது ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும். 2021ம் ஆண்டு டிசம்பருக்குள்,  நமது ராக்கெட் மூலம் முதல் விண்வெளி வீரர் அனுப்பப்படுவார். இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான திட்டம். இந்த இலக்கை நோக்கிதான் இஸ்ரோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,’’ என்றார்.

Tags : Shiv Bhatti ,ISRO ,Shiva , ISRO President ,Shiva,Chandrayaan-2 ,complete
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு