×

ஒரு மணி நேரம் பறந்து சோதனை முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு: 8ம் தேதி அதிகாரப்பூர்வ விழா

புதுடெல்லி: இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி முதல் ரபேல் போர் விமானத்தை பிரான்ஸ் நிறுவனம் தயாரித்து முடித்துள்ளது. இது நேற்று சம்பிரதாயப்படி விமானப்படை அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய விமானப்படைக்கு ரூ.59 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்சை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.  இதற்காக, அந்த நிறுவனத்திடம் முதல்கட்டமாக ₹34 ஆயிரம் கோடியை இந்தியா வழங்கியது.  இந்த ஒப்பந்தப்படி முதல் போர் விமானத்தை டசால்ட் நிறுவனம் தயாரித்து முடித்துள்ளது. இதை குறிக்கும் வகையில், பிரான்சில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை துணை தலைவர் ஏர்மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி  தலைமையிலான குழுவிடம், அந்த விமானம் சம்பிரதாயத்துக்காக ஒப்படைக்கப்பட்டது. இதன் வால் பகுதியில் முதல் ரபேல் விமானம் என்பதை குறிக்கும் வகையில், ‘ஆர்பி 001’ என பொறிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த விமானத்தில் சவுத்ரி ஒரு மணி நேரம்  பறந்து சோதித்து பார்த்தார்.

இந்த விமானத்தை இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைப்பதற்கான அதிகாரப்பூர்வ விழா,  தசரா பண்டிகை தினமான அக்டோபர் 8ம் தேதி பிரான்சில் நடைபெறுகிறது. அன்றைய தினம், ‘இந்திய விமானப்படை தினம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். அவரிடம் முறைப்படி முதல் விமானம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும், முதல் 4 ரபேல் போர் விமானங்கள் அடுத்தாண்டு மே மாதம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படைத்தளத்துக்கு வருகிறது. இந்திய விமானப்படையில் ரபேல் சேர்க்கப்படுவதை முன்னிட்டு, 10 விமானிகள், 10 விமான  இன்ஜினியர்கள், 40 தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 36 ரபேல் விமானங்களும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது, இந்திய விமானப்படைக்கு பெரிய பலத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : ceremony ,Rafael ,India , fly test, First, Rafael fighter, India,Official ceremony
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா