×

வீரவநல்லூர், புளியங்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

வீரவநல்லூர்: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கேரளா மற்றும்  தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதுபற்றிய விவரங்களை இலங்கை அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு  அனுப்பியது. அதைத் தொடர்ந்து  தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தமிழகத்தில் கோவை, நெல்லை மாவட்டம், தென்காசியில் திடீர் சோதனை நடத்தினர். கடந்த ஜூன் மாதம் கேரளாவில் இருந்து  வந்த என்ஐஏ அதிகாரிகள் தென்காசியைச் சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் அகமது சாலிஹ்  என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் தீவிரவாத செயலுக்காக  நிதி திரட்டிய விவகாரத்தில் கடந்த  ஜூலை மாதம் மேலப்பாளையம் உட்பட 14  இடங்களில் 16 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ்வாறு  என்ஐஏ அதிகாரிகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக  தமிழகத்தின் முக்கிய  நகரங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி பள்ளிவாசல் வடக்குத்தெருவை சேர்ந்த திவான்  முஜிபூர் (36) என்பவரது வீட்டில் நேற்று காலை 7 மணிக்கு ராதாகிருஷ்ணன் தலைமையிலான 6 பேர்  கொண்ட தேசிய  புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை  நடத்தினர். 11 மணி வரை இந்தச் சோதனை நடந்தது. இதில் 2 ஸ்மார்ட்போன், பாஸ்போர்ட், சர்வீஸ் சர்டிபிகேட், சம்பள பில், இன்டர்நேஷனல் லைசென்ஸ், ஆதார் கார்டு  உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. திவான் முஜிபூர் நெல்லை  மாவட்டம், வீரகேரளம்புதூரில் உள்ள ஐடிஐயில் படித்துள்ளார். அதன்பின்னர் 15  ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பஷீரா  (30) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு  மகளும் உள்ளனர். இவரது பாஸ்போர்ட்  உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள் எத்தனை முறை வெளிநாடு  சென்றுள்ளார்? இவருக்கும், தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது  உள்ளிட்ட பல்வேறு  கோணங்களில் விசாரணை நடத்தினர்.

ஓராண்டுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய திவான் முஜிபூர், மீண்டும் வெளிநாடு செல்லவில்லை. அவருடன் துபாயில் வேலை பார்த்த மைதீன் என்பவர் புளியங்குடியில்  பெயின்ட் கடை வைத்துள்ளார். அவரது வீட்டில் தங்கியிருந்து கடையில்  திவான் முஜிபூர் வேலை பார்த்து வருகிறார். இதனால் புளியங்குடி  பள்ளிவாசல் தெருவில் உள்ள மைதீன் வீட்டிலும், பெயின்ட் கடையிலும் ஒரே  நேரத்தில் விஜயகுமார் தலைமையிலான 3 என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  இவர்களுக்கு துணையாக  உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இச்சோதனையின்போது திவான் முஜிபூரின் செல்போனை பறிமுதல் செய்தனர். காலை 7 மணிக்கு நுழைந்த என்ஐஏ அதிகாரிகள் புளியங்குடியில் காலை  9 மணி வரையிலும், வெள்ளங்குளியில் 11 மணி வரையிலும்  சோதனை நடத்தினர். அதன் பின் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும்  என்று கூறிவிட்டு கொச்சிக்கு  புறப்பட்டு சென்றனர்.

பயிற்சிக்கு சென்றாரா?
துபாயில் திவான் முஜிபூர் பணிபுரிந்தபோது தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரபு நாடுகளில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் நடந்த விசாரணையில் திவான்  முஜிபூர், ஒருநாள் பயிற்சிக்கு சென்ற தகவல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து இச்சோதனை நடந்துள்ளது.

Tags : Veeravanallur ,Puliyankudi NIA , Veeravanallur, Puliyankudi, NIA Officials,
× RELATED நெல்லை அருகே வக்கீல் தூக்கிட்டு தற்கொலை