×

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக வார்டுகள் சீரமைப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி காஞ்சி கலெக்டரிடம் திமுக மனு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் வகையில் வேங்கைவாசல் ஊராட்சியில் வார்டுகளை மறு சீரமைப்பு செய்ததாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் கலெக்டருக்கு ஊராட்சி  திமுக செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வேங்கைவாசல் ஊராட்சி திமுக செயலாளர் த.மனோநிதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பி.பொன்னையாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:வேங்கைவாசல் ஊராட்சியில் பல வார்டுகளை மறு வரையறை செய்வது தொடர்பாக கடந்த 2017 டிசம்பர் 27ம் தேதி வேங்கைவாசல் ஊராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் பிடிஓ ஒரு அறிவிப்பை ஒட்டினார்.அதில் செயின்ட் தாமஸ் மலை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சியில் வார்டு 1 முதல் 12வது வார்டுவரை புதிய எல்லைகளை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.வேங்கைவாசல் ஊராட்சியில் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,578 குடும்பங்கள் உள்ளன. மக்கள் தொகை 13,671. இதில் 6,805 ஆண்கள், 6866 பெண்கள். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு சரியான கணக்கெடுப்பில்லை. தெரு  வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தங்கள் கட்சிக்கு சாதமாக வாக்குகளை பெறுவதற்காக வேங்கைவாசல் ஊராட்சியில் ஆளும்கட்சி தங்கள் கட்சி வாக்குகள் அதிகம் உள்ள வார்டுகளை சீரமைப்பு என்ற பெயரில்  ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு உதாரணம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை 11வது வார்டுடன் இணைத்ததாகும். திமுகவின் செல்வாக்கை உடைக்கும் வகையில் வார்டு சீரமைப்பு அதிகாரிகள் சட்ட விரோதமாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சீரமைப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளனர். ஆளும்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாக வேங்கைவாசல் ஊராட்சியில் வார்டுகளை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்கள் வந்தன. ஆனால், அவை பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2018 டிசம்பர் 14ம் தேதி வரைவு மறு சீரமைப்பு வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் மறு சீரமைப்பில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

 ஆளும்கட்சிக்கு சாதகமான பகுதிகளை ஒருங்கிணைத்து ஆளும்கட்சியை வெற்றிபெற வைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 167ன்கீழ் ( மற்றவருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்  ஆவணங்களை உள்நோக்கத்துடன் தவறாக தயாரித்தல், மாற்றுதல், மொழிபெயர்த்தல்) தண்டனைக்குரியது. எனவே, விதிமுறைகளுக்கு முரணாக ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட,   சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு வார்டு மறு சீரமைப்பு என்ற பெயரில் ஆளும்கட்சிக்கு சாதகமான பகுதிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ஆளும்கட்சிக்கு சாதகமான பகுதிகளை ஒருங்கிணைத்து ஆளும்கட்சியை வெற்றிபெற வைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 167ன்கீழ் தண்டனைக்கு உரியது.

Tags : DMK ,collector ,Kanchi , local elections, DMK ,Kanchi Collector ,officials
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...