×

மீன்வள பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஊழல் எதிர்ப்பு குழுக்களின் கூட்டமைப்பு செயலாளர் செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை பல்கலைக்கழக பதிவாளர் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிட்டார்.அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பல்கலைக்கழகம் வரையறுத்துள்ள கல்வித் தகுதியிலிருந்து மாறுபட்டுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை உதவி பேராசிரியர்களாக  தேர்வு செய்யும் வகையில் கல்வித் தகுதி  மாற்றப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் பல்வேறு விதிமுறைகளும் அறிவிப்பாணையில் மீறப்பட்டுள்ளன.

 சென்னையில் அடிப்படை அறிவியல் டீன் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலிலும் ஒப்புதல் பெறவில்லை. தமிழக அரசின் நிதி ஒப்புதலும் பெறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், உதவி பேராசிரியர்களை தேர்வு  செய்யும் தேர்வுக்குழுவில் பதவிக்கு போட்டியிடும் நபர் ஒருவரை தலைவராக பல்கலைக்கழக துணை வேந்தர் நியமித்துள்ளார்.இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும், இந்த பதவிகளுக்கான தேர்வில் பண பலமும் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக அரசிடம் புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணைக்கு  தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சுப்புராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த  நீதிபதிகள், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து ரிட் வழக்காகத்தான் வழக்கு தொடர முடியும். இருந்தபோதிலும் மனுதாரர் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது, முறைகேடுகள் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளதால் இதை பொதுநல வழக்காக  விசாரிக்கிறோம் என்றனர். இதையடுத்து, இந்த வழக்கில் அக்டோபர் 18ம் தேதி பதில் தருமாறு மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், மீன்வளத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,Tamil Nadu ,government ,assistant professors ,Assistant Professor ,Fisheries University HC , Assistant Professor , Fisheries University, HC,o Tamil Nadu ,government
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்