×

பெங்களூருவில் இன்று 3வது டி20 தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு: சமன் செய்யுமா தென் ஆப்ரிக்கா?

பெங்களூரு: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்க இருந்த முதல் டி20 போட்டி, கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.அடுத்து மொகாலியில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 150 ரன் இலக்கை துரத்திய இந்தியா, கேப்டன் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் விழ்த்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கோஹ்லி ஆட்டமிழக்காமல் 72 ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

ஆர்சிபி அணி கேப்டனாக விராத் லோஹ்லி பெங்களூருவில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளதால், எம்.சின்னசாமி ஸ்டேடியம் அவருக்கு மிகப் பிடித்தமானது.இங்கு அவரது ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். தொடக்க வீரர்கள் ரோகித், தவான் நல்ல பார்மில் உள்ளனர். இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அடுத்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடக்க உள்ள நிலையில் டோனிக்கு மாற்றாகக் கருதப்படும் பன்ட் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். மற்றபடி இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக டி20 தொடரை கைப்பற்றுவது இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் நிலையில், இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய தென் ஆப்ரிக்க அணியும் வரிந்துகட்டுகிறது.

கடந்த போட்டியில் பந்துவீச்சாளர்களை சரியாகக் கையாளத் தவறிய கேப்டன் டி காக், திறமையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. அதற்கு வருண பகவான் வழி விடுவாரா? என்பதே ரசிகர்களின் கவலை. மழை குறுக்கீடு இல்லாவிட்டால் சுவாரசியமான ஆட்டம் விருந்தாக அமையும்.

* எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 4 போட்டியில் விளையாடி உள்ள இந்தியா 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றியை வசப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

* தென் ஆப்ரிக்க அணி பெங்களூருவில் முதல் முறையாக டி20 போட்டியில் விளையாட உள்ளது.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி.

தென் ஆப்ரிக்கா: குவின்டான் டி காக் (கேப்டன்), ராஸி வான் டெர் டஸன், தெம்பா பவுமா, ஜூனியர் டாலா, பியார்ன் பார்ச்சுவன், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, அன்டில் பெலுக்வயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே.

Tags : India ,Bengaluru India ,series , India, win 3rd, T20 series , Bengaluru
× RELATED அக்டோபரில் இந்தியாவுடன் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு