×

40 ஆண்டுகளுக்கு முன் உதித்த கனவை நிறைவேற்ற 45 நாட்களில் உறைபனி மலைகளை கண்டு ரசிக்க பைக்கில் சென்ற கட்டிட தொழிலாளி

பெரம்பலூர்: பனிப் பிரதேசங்களை பக்கத்தில் நின்று பார்த்து ரசிக்க வேண்டுமென்பது பால்ய வயது கனவு. 14 ஆயிரம் கிமீ பைக்கில் பயணித்து, கனவை நனவாக்க புறப்பட்ட பெரம்பலூர் பைக் ஆர்வலர். உறைபனி மலைகளை காணும் உல்லாச பயணத்திற்கு, உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் உறவினர்கள். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரஹமத்துல்லா (52). 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், தனது 21 வயதிலேயே துபாய்க்கு வேலைக்கு சென்றார். 26 வது வயதில் திருமணம் செய்துகொண்ட ரஹமத்துல்லாவுக்கு ஒரு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி பேரக்குழந்தையும் உள்ளனர். 2வது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ரஹமத் துல்லா வெளிநாட்டில் கட்டுமானப்பணி செய்தவர்.

தாத்தாவாகிவிட்ட நிலையிலும் ரஹமத்துல்லாவுக்கு அல்டிமேட் ஸ்டார் அஜீத்தை போல, பைக்கில் வெகுதூரம் பயணிப்பது அலாதிப் பிரியமாகும். 21 வயது முதல் 45வயதுக்குள்ளாக 18 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே வேலை பார்த்துள்ள ரஹமத்துல்லாவுக்கு, தனது பால்ய வயது கனவு ஒன்று உள்ளது. அதாவது பனிப்பிரதேச மலைகளை பக்கத்திலிருந்து ரசிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆயுள் அரை நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையில், அந்த ஆசை மீண்டும் அரும்பியதால், பால்ய வயது கனவை பைக்கில் சென்று நிறைவேற்ற புதிய திட்டமும் உதித்தது. இதற்காக திருமணமான பிறகு பலமுறை இமயமலை பனிப்பிரதேசத்திற்கு செல்ல நினைத்தவருக்கு, பார்டர் என்றாலே பதற்றமான பகுதியென்ற அச்சத்தால் பல முறை தவிர்த்து வந்தார். இந்நிலையில் செப்டம்பரில் இமயமலைக்கு செல்லத்திட்டமிட்டுள்ளார். இதற்கு மனைவி, மகள், அம்மா மற்றும் உறவினர்களிடம் சொல்லி விருப்பத்தை தெரிவித்துள்ளார். அனைவரும் சம்மதிக்கவே பைக் பயணத்திற்காக ₹1.20லட்சத்தில் 220 சிசி திறன் கொண்ட அவெஞ்சர் குரூஸ் என்ற அதிவேக, தொலை தூரப்பயணத்திற்கான புதிய பைக் ஒன்றை வாங்கி, அதில் பயணத்திற்கு ஏற்றபடி ₹40 ஆயிரத்திற்குள் எக்ஸ்ட்ரா பிட்டிங் வேலைகளை செய்துள்ளார். தான் செல்லும் வழித் தடங்களுக்கான மேப் வாங்கி பயண பாதையை நிர்ணயித்து கொண்டார்.

தனது பைக்கில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கொண்டார். ஆங்கிலத்தை புரிந்து கொள்ளவும், இந்தியில் சரளமாக பேசவும் தெரிந்துள்ள ரஹமத்துல்லா பயணத்துக்கு தயாரானார். சுற்றுலா பயணமாக செல்லும் இவரை இவரது மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் கடந்த 15ந்தேதி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இந்த பைக் பயணம் குறித்து ரமத்துல்லா தெரிவித்ததாவது:14ஆயிரம் கி.மீ பயணித்து பார்டரில் உள்ள பனிப்பிரதேசங்களை பக்கத்தில் நின்று பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே செல்லுகின்றேன். வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சென்று, தெலங்கானா, ஒடிசா, பீகார், மேற்குவங்கம் டார்ஜிலிங், சிக்கிம் என பயணித்து சீன எல்லையில் நின்று ரசிக்க உள்ளேன். பின்னர் பூடான் வழியாக யூனியன் பிரதேசங்களான அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், மிஜோரம், மியான்மர் பகுதிகளில் உள்ள பனிப்பிரதேசங்களை பார்த்து ரசித்தபடி பயணித்து 45 நாட்களில் சொந்த ஊர் திரும்பத்திட்டமிட்டுள்ளேன். 40 ஆண்டுகளுக்கு முன்பு உதித்தக் கனவை 45 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.


Tags : architect ,mountains , Architect ,bike , frosty mountains ,45 days , fulfill , 40 years ago
× RELATED நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்:...