×

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது?: டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்த தலைமை முடிவு

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தலைமை உறுதி அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்துக்கு ஒரு முறை பொதுக்குழுவும், இரண்டு முறை  செயற்குழுவையும் நடத்த வேண்டும். அதிமுக கட்சியை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு பின் கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதுடன், சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் பதவி மற்றும் அதிமுக உறுப்பினர் பதவி ரத்து, ஒருங்கிணைப்பாளர்களுக்கே முழு அதிகாரம் என பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

பின்னர் 2018ம் ஆண்டு நடத்த வேண்டிய பொதுக்குழுவை அதிமுக கூட்டவில்லை. கஜா புயலால் அதிமுக  பொதுக்குழு கூட்ட இயலாத காரணத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்  வாயிலாக கட்சி தலைமை அனுப்பி வைத்தது. இதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது.
கஜா புயல் நிவாரண பணிகள் முடிந்தும் ஓராண்டு மேலாகியும், இன்னும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டப்படவில்லை. இது அதிமுக கட்சிக்குள்ளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு மீண்டும் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் நேரடியாக போர்க்கொடி தூக்கினார்கள். தற்காலிகமாக அவர்களை சமாதானப்படுத்தினாலும், அதிமுகவின் 2ம், 3ம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்ட வேண்டும். அப்போதுதான் தற்போது அதிமுக கட்சியில் நிலவிவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசி முடிவு எடுக்க முடியும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் கட்சி தலைமையும் சரி, தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் சரி பொதுக்குழு கூட்டினால் பல்வேறு பிரச்னைகள் வரும் என்பதால் அதை தள்ளி வைப்பதையே குறியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான, சூழ்நிலையில் அடுத்த மாதம் 6ம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் அதிமுகவில் பொதுக்குழுவை வருகிற டிசம்பர் மாதத்தில் நடத்தி முடிக்க  அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதியில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற முடிந்தது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலும் நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி காரணமாக, வருற நவம்பர் மாதம் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு தள்ளப்பட்டுள்ளது. அதனால், உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடியும் வரை அதிமுக பொதுக்குழுவை நடத்த வாய்ப்பு இல்லை. எனவே, வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள், ஏதாவது ஒரு நாளில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்ட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கும் உறுதி அளித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நிச்சயம் நடைபெறும்” என்றார்.

* உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடியும் வரை அதிமுக பொதுக்குழுவை நடத்த வாய்ப்பு இல்லை.
* எனவே, வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்ட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
* தமிழக பொதுப்பணித்துறையில் செயல்படாத ஸ்வர்மா பிரிவுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
* கடனில் வாங்கிய பணத்தில் வீண் செலவு  
* பரபரப்பு தகவல் அம்பலம்

Tags : meeting ,AIADMK , When ,AIADMK meeting, held ,last two years
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்