×

காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப்படுத்தும் வகையில் வரலாற்று பாடத்தை மாற்றி எழுத வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப்படுத்தும் வகையில் வரலாற்று பாடத்தை மாற்றி எழுத வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :வைகைக் கரையில், கீழடியில் நடைபெற்று வருகின்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வீற்று இருந்தது வரலாறு.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையில் வைகை ஆற்றில் சிறுவர்கள் பழங்கால ரோமாபுரி நாணயங்களைச் சேகரித்து பழம் பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்த தகவல்களை பல எழுத்தாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சிதான் கீழடி ஆய்வு. அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள், அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்தே வருகின்றது.பள்ளிப் பாடங்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாற்றையே முதன்மையாகக் கற்பித்து வருகின்றார்கள். பண்டித நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாற்றை, சேர சோழ பாண்டியர்களைப் புறக்கணித்து வருகின்றார்கள். இந்த நிலை இனியும் தொடரக்கூடாது. காவிரி,வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப் படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் வரலாற்றுப் பாடத்திட்டங்களை மாற்றி எழுத வேண்டும். உதயச்சந்திரன் ஐஏஎஸ் தொல்லியல்துறைக்குப் பொறுப்பு ஏற்ற பின்னர் மேற்கொண்டு வருகின்ற பணிகளையும், கீழடி ஆய்வுகளுக்கு தூண்டுகோலாக இயங்கி வருகின்ற வெங்கடேசனையும் பாராட்டுகிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cauvery ,Vaigai ,Copper Civilizations , Vaigo report , rewrite history lesson ,prioritize Cauvery, Vaigai,copper civilizations
× RELATED கங்கையை தூய்மைப்படுத்த 20,000 கோடி...