புஞ்சைபுளியம்பட்டி அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிரசவம்

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கணக்கரசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த காளிமுத்துவின் மனைவி கிருத்திகா(20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வந்து, பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த கிருத்திகாவை ஏற்றிக்கொண்டு புஞ்சை புளியம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தது. பின்னர், அங்கிருந்து கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மதன்குமார் மற்றும் ஓட்டுநர் சல்மான்கான் ஆகியோர் பணியில் இருந்தனர். காசிபாளையம் அருகே சென்றபோது கிருத்திகாவிற்கு பிரசவ வலி அதிகமானது.

இதனால் ஆம்புலன்ஸிலேயே கிருத்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ பணியாளர் மதன்குமார் பிரசவம் பார்த்தார். இதையடுத்து தாயும், சேயும் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டனர். தாய், சேய் உடல்நிலை சீராகவும் நலமாக உள்ளதாகவும், இருவரும் மருத்துவமனையில் பராமரிக்கப்படுவதாகவும், மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: