×

ஆர்டிஐ மூலம் அம்பலமானது கட்டண கொள்ளை: அரசு பஸ்களில் கூடுதல் கட்டணத்தை குறைக்காவிட்டால் வழக்கு

கந்தர்வகோட்டை: அரசு பேருந்துகளில் பல்வேறு ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று சென்னை போக்குவரத்து முதன்மை செயலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கர், ஊர் பொதுமக்கள் சார்பாக சென்னை போக்குவரத்து முதன்மை செயலருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: போக்குவரத்து கழகங்கள் கூடுதல் கட்டணங்கள் வசூல்செய்து விட்டு அரசாணை 48ன் படிதான் கட்டணம் வசூலிக்கின்றோம் என அரசுக்கு தவறான தவறான தகவல்களை தந்துள்ளனர். ஏற்கனவே 19.7.19ல் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தபோது அரசு போக்குவரத்து கழகங்களில் எம்எஸ்.ஜிஓ.48ன் படி கட்டணம் வசூல் செய்கிறோம் என அறிவித்திருந்தது. ஆனால் போக்குவரத்து கழகங்கள் பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி கூடுதல் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக திருச்சியிலிருந்து மதுரைக்கு பஸ்கட்டணம் ரூ.103 போக்குவரத்து கழகத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்துகளில் ரூ.120 வசூல் செய்யப்படுகிறது. இதே போல் புதுக்கோட்டையிலிருந்து கந்தர்வகோட்டைக்கு சாதாரண பேருந்துகளில் ரூ.20ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.26ம் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்டிக்கர் விதவிதமாக ஒட்டிக் கொண்டு புதுக்கோட்டை - கந்தர்வகோட்டைக்கு ரூ.30 வசூலித்து கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் திருச்சியிலிருந்து மதுரை செல்ல ரூ.103 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அனைத்து போக்குவரத்து கழகங்களில் கண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி அதிக கட்டண கொள்ளையில் ஈடுபடக்கூடாது . உடனடியாக பேருந்து கட்டணங்களை குறைக்க வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சமூக ஆர்வலர் பாஸ்கள் அனுப்பியுள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். புகார் மனுக்களின் நகல் மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளர், சென்னை போக்குவரத்து ஆணையர், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

முன்னதாக, இதுதொடர்பாக கடந்த 2 மாதத்திற்கு முன் மேற்கண்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் சார்பில் அரசு பஸ்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி போக்குவரத்து முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதற்கு பதில் கடிதம் அனுப்பி இருந்த முதன்மை செயலாளர், ‘‘எம்எஸ்-48 அரசாணைபடி தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து, சமூக ஆர்வலர் பாஸ்கர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்து விளக்கம் கேட்டிருந்தார். அதில், நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தது. இதனால், அவர் கட்டணத்தை திரும்ப வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : robbery ,government ,RTI , Government bus, fare
× RELATED விற்றல் மற்றும் பணமாக்கல் குறித்த...