×

30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மெகா கூட்டு கொள்ளை: திருவட்டார் கோயிலில் மீட்கப்பட்ட 4½ கிலோ நகையின் நிலை என்ன?

நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கொள்ளையில் மீட்கப்பட்ட நகைகளின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பாக நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற கொள்ளை 1989ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. 1974ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை இந்த கொள்ளை நடைபெற்றதும் தெரியவந்தது. மொத்தம் ஆறரை கிலோ நகைகள் கொள்ளை போயிருந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு, விசாரணை, கைது நடவடிக்கைகள், நகைகள் மீட்பு என்று சுமார் 30 ஆண்டுகாலம் கடந்து விட்ட நிலையில் மீட்கப்பட்ட நகைகள் பத்மநாபபுரத்தில் உள்ள அறநிலையத்துறையின் ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய 23 பேரில் 16 பேருக்கு 6 ஆண்டுகளும், 9 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதில் 23 பேரில் 22 பேர் ஜாமினில் பெற்றுவிட்டனர். வழக்கில் தொடர்புடைய ஜனார்த்தனன் போற்றி வேறு வழக்கு ஒன்றில் புழல் சிறையில் உள்ளார். இவர்கள் மேல்முறையீடு செய்துகொள்ள 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கொள்ளை போனது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி அனில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளைபோன நகையில் இருந்து மொத்தம் நான்கரை கிலோ தங்கத்தை போலீசார் அப்போது பறிமுதல் செய்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியபோது, வெட்டிஎடுத்த தங்கத்திற்கு பதில் எண்ணை டப்பாவை வெட்டி அதன்மேல் மஞ்சள் பெயிண்ட் அடித்து சாமி சிலை மீது ஒட்டிஇருந்ததையும். கிரீடத்தையும் வெட்டி எடுத்துவிட்டு, கிரீடத்திற்கு பதில் மினுமினுக்கும் மஞ்சள் பேப்பரை ஒட்டி பக்தர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. ஆதிகேசவபெருமாள் கோயிலில் கேசவன்போற்றி, ஸ்ரீ ஐயப்பன், பரளி ஜெனார்த்தனன், கோபாலகிருஷ்ணன், கோபிநாதன்நாயர் ஆகியோர் பூஜை செய்தகாலகட்டத்தில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்தது தொடர்பாக அறநிலையத்துறை ஊழியர்கள் சங்கரகுத்தாலம், முருகப்பன், வேலப்பன்நாயர், கேசவன்நாயர், ராஜையன், மகாராஜபிள்ளை ஆகியோர் ஆய்வு செய்து தங்கநகை சரியாக இருந்தது என அறிக்கை கொடுத்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பூஜாரிகள், சில பக்தர்கள் என்று முத்தரப்பும் சேர்ந்து கோயிலில் கூட்டுக்கொள்ளையடித்தது.

கோயிலில் இருந்த நகை விவரங்கள் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது. மொத்தம் 13 கிலோ 13 கிராம் 52 மில்லி தங்கம் இருந்ததாக கணக்கில் உள்ளது. ஆனால் சுமார் 16 கிலோவிற்கு மேல் நகைகள் இருந்தன. ஆய்வு செய்த அறநிலையத்துறை ஊழியர்கள் இந்த கோயிலுக்கு சொந்தமாக 7 ஆயிரம் கிராம் தங்கம் தான் உண்டு. அந்த நகை சரியாக உள்ளது என அறிக்கையில் கொடுத்து தப்பிக்க பார்த்தனர். அதன்பிறகு போலீசார் ஆய்வு செய்ததில் மொத்தம் 1170 கிராம் தங்கம் மட்டுமே இருந்தது. மற்றவை கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது. தங்க நகைகளின் விவரத்தை மாற்றிய அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் தற்போது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ராசையன், கேசவன் நாயர் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர்.

இந்தநிலையில் தற்ேபாது வழக்கு விசாரணை காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இந்த நகைகள் சரிபார்க்கப்படவில்லை. கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் போன்றவற்றுக்கும் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வருகிறது. ஆதிகேசவ பெருமாள் கோயில் கொள்ளையில் மீட்கப்பட்ட நகைகள் பல உருக்கப்பட்டு கட்டியாகவும், பாளங்களாகவும் மாற்றப்பட்ட நிலையில்தான் மீட்கப்பட்டிருந்தன. எனவே இந்த நகைகளின் தற்போதைய நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே நிபுணர்களை கொண்டு இந்த நகைகளை ஆய்வு செய்ய வேண்டும், நகைகளின் விபரத்தை பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : jewelery ,Nagercoil ,Thiruvattar , Nagercoil, temple, jewelery
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...