×

டெல்லியில் இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு: தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு!

டெல்லி: தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று டெல்லியில் செய்தியாளளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 19ம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடையவுள்ளது. இதையடுத்து இம்மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஜார்க்கண்ட் மாநிலமானது மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளைக் கொண்டது.

அதனால் அங்கு இன்னமும் தேர்தல் ஏற்பாடுகள் முடிவடையவில்லை. இதையடுத்து முதல் கட்டமாக ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் நண்பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 3 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைகளுக்கும் புதுவையில் காமராஜர்நகர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அந்தந்த மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Chief Election Officials ,press conference ,Delhi , Delhi, Chief Election Commission, Press Release, Election Date
× RELATED எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி...