வளசரவாக்கம் பகுதியில் மழைநீர் சேகரிப்பு வசதியில்லாத 3 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ் : அமைச்சர் பெஞ்சமின் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்துக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதியில்லாத 3 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.  பெருநகர சென்னை மாநகராட்சி, 11வது  மண்டலத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம், கங்கையம்மன் கோயில் குளத்தை ₹38 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர், அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணறுகளை தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சென்னை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வீடுகளுக்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். மேலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தாத வீடுகளுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்திற்கு உட்பட்ட வளசரவாக்கம் பகுதியில் உள்ள 2911 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மக்கள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முன்வந்து செயல்படுத்த வேண்டும். இந்த திட்டம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பகுதிகளில் 13 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  மேலும், இந்த பகுதியில் உள்ள 51 பழைய கிணறுகள் தூர்வாரப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர்  தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>