×

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு தொடங்கியது: கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதி

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. தேர்வர்கள் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். ஜூலை 12ம் தேதி முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு நடந்தது. இத்தேர்வு கட்டுரை வடிவில் இடம் பெற்றிருந்தது. மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் 2 இடங்களில் நடந்தது. அதாவது, சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளி, எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடந்தது. ேதர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தேர்வு காலை 9 மணிக்குதான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணி முதலே வர தொடங்கினர். அவர்கள் போலீசார் மூலம் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ேதர்வு மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2ம் நாளான இன்று காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது. 22ம் தேதி (நாளை) காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4) நடக்கிறது. அதன் பிறகு 28ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வு நடக்கிறது. கடைசி நாளான 29ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.

Tags : IAS ,IPS , IAS, IPS, IRS
× RELATED யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்