×

கிரிக்கெட் பந்து மார்பில் தாக்கி கடற்படை வீரர் பலி சக வீரர்களிடம் போலீசார் விசாரணை: துறைமுகம் பகுதியில் பரபரப்பு

சென்னை: சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் நிறுத்தப்பட்டு தினந்தோறும் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்குவதற்காக துறைமுகம் 5வது கேட் அருகேயுள்ள கார் பார்க்கிங் பகுதியில் கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுபோல் நேற்று முன்தினம் மாலை கார் நிக்கோபர் என்ற கப்பலில் பணிபுரியும் கடற்படை வீரர்களான ஜோகிந்தர்சிங், விவேக், கமல், விஸ்வகுமார் உள்ளிட்ட வீரர்கள் கார் பார்க்கிங் பகுதியில் ரப்பர் பந்து மூலம் கிரிக்கெட் விளையாடினர். அப்போது ஜோகிந்தர்சிங் பேட்டிங் செய்துள்ளார். விவேக் பந்து போட்டுள்ளார். அவர் வீசிய பந்து ஜோகிந்தர்சிங் மார்பில் பட்டு அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் கடற்படைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் ஜோகிந்தர்சிங்கை அடையாறில் உள்ள கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஜோகிந்தர் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துறைமுகம் போலீசார் விசாரித்தனர். ஜோகிந்தர் சிங் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2013ம் ஆண்டு கடற்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த மே மாதம்தான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பந்து வீசிய கடற்படை வீரர் விவேக் மற்றும் சக வீரர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : Soldier ,cricket chest Soldier , Cricket ball, navy player, kills
× RELATED ராணுவ வீரர் மாயம்