தன்னிடம் இருப்பதாக யூ டியூப்பில் வீடியோ நித்யானந்தா மீது போலீசில் புகார்: ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்டுத்தர கோரிக்கை

மேட்டூர்: நித்தியானந்தாவிடம் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலய மூல லிங்கத்தை மீட்க கோரி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர்த்தேக்கக் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் இருந்த நந்திசிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் ஆலயத்தை கிராம மக்கள் இட மாற்றம் செய்து காவேரிபுரம் அருகே உள்ள பாலவாடியில் அமைத்தனர். ஆனாலும் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயத்தை சேதப்படுத்தாமல் விட்டுச்சென்றனர். ஆலயத்தில் இருந்த உலோகச்சிலைகள் பாலவாடியில் புதியதாக கட்டப்பட்ட ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் இன்றும் உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழே குறையும்போது ஜலகண்டேசுவரர் ஆலயம் வெளியே தெரியும். தற்போது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால் ஜலகண்டேசுவரர் கோயில் நந்திசிலை முழுவதுமாக அணைக்குள் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் மூலவர் லிங்கம் தன்னிடம் உள்ளதாக 18.9.19 அன்று நித்தியானந்தா யூடியூப் வீடியோ காட்சியில் பேசி உள்ளார். இது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக நேற்று , பாலவாடியைச் சேர்ந்த வேலுச்சாமி, சக்திவேல் ஆகியோர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், ‘காவேரிபுரம் ஊராட்சி பாலவாடியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலின் மூல லிங்கம் தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்டு 18.9.19 அன்று நித்தியானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே, அந்த கோயிலின் மூல லிங்கத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.  மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: