×

நேபாள்-முக்திநாத் 13 நாள் யாத்திரை: ரயில்வே சிறப்பு சுற்றுலா ஏற்பாடு

சென்னை: தனி ஏசி ரயில் மூலம் 13 நாட்கள் நேபாள்-முக்திநாத் யாத்திரைக்கு ரயில்வே துறை சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் இணை பொது மேலாளர் ஷாம் ஜோசப் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தெற்கு ரயில்வே துறை தென்னகத்து மக்களை வட இந்திய புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிறப்பு வசதிகள் மூலம் தனி ஏசி சுற்றுலா ரயில் மூலம் இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றுலா மற்றும் யாத்திரைகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 19ம் தேதி 13 நாள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வகைகளில் சுற்றுலாவிற்கு ஏற்பாடு உள்ளது. முதலாவதாக முக்திநாத் தர்ஷன் சுற்றுலாவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திவ்ய தேச ஸ்தலங்களான நைமிசாரண்யம் ஸ்ரீதேவராஜ பெருமாள், ஸ்ரீ ராமர் மற்றும் முக்திநாத் மூர்த்தி பெருமாள் திவ்ய தேசம், தவி அருவி, மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவாலயம் உள்ளிட்ட ஆலயங்களுக்கு அழைத்துசெல்லப்படுவார்கள். இதில், மற்றொரு பிரிவாக தி குளோரி கிங்டம் என்ற சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் லக்னோ உள்ளூர் சுற்றுலா, புத்தர் பிறந்த இடமான லும்பினி, போக்ராவில் உள்ள பிந்து பாஷினி ஆலயம், காட்மண்டுவில் உள்ள தர்பார் சதுக்கம், பெளத்தநாதர் உள்ளிட்ட இடங்களை ரசிக்கலாம்.  

முக்திநாத் யாத்திரைக்கு கட்டணமாக முதல் வகுப்பு ஏசிக்கு ₹63,400ம், 2ம் வகுப்பு ஏசிக்கு 56,410, 3ம் வகுப்பு ஏசிக்கு 53,330ம், தி குளோரி கிங்டம் சுற்றுலாவிற்கு முதல் வகுப்பு ஏசிக்கு 60,670, 2ம் வகுப்பு ஏசிக்கு 53,680, 3ம் வகுப்பு ஏசிக்கு 50,600ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய சைவ உணவுகளே பரிமாறப்படும். மேலும், வாகன வசதி, தங்கும் வசதி உள்ளிட்ட வசதிகளும் அடங்கும். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் www.irctctourism.com என்ற இணையதள முகவரில் சென்று முன்பதிவு செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதேபோல், சென்னை சென்ட்ரல், கோவை, மதுரை உள்ளிட்ட ரயில் நிலைய கவுண்டர்களில் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்துகொள்ளலாம். கோவா செல்லும் ஒரு திட்டமும் யோசனையில் உள்ளது. இது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : Pilgrimage ,Nepal ,Muktinath ,Railway Special Travel Organization Nepal ,Railway Special Travel Organization , Nepal, Muktinath, Pilgrimage, Railways
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது