×

டெல்டாவில் மழை நீடிப்பு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: மின்சாரம் தாக்கி பெண் பலி

வேதாரண்யம்: டெல்டாவில் மழை நீடித்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி வங்க கடலில் நிலை கொண்டிருப்பதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரமாக இரவு நேரங்களில் மழை  பொழிந்து வருகிறது. இதுதவிர தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாகி உள்ளது. இதன்காரணமாக டெல்டாவில் ஒரு சில இடங்களில் நேற்று கன மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவானது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை கனமழை கொட்டியது. வேதாரண்யம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நள்ளிரவில் மிதமான மழை பொழிந்தது. தஞ்சை, திருவையாறு, வலங்கைமான்,  முத்துப்பேட்டை பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பலமாக பெய்தது. பெரம்பலூர், அரியலூரில் இரவு 45 நிமிடம் கனமாக பொழிந்தது. கரூர் மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பரவலாக சாரல் மழை  பொழிந்தது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் இரவில் பலத்த மழை கொட்டியது.

திருச்சியை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக தினமும் இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலையில் சிறிது நேரம் பெய்த மழை, அதன்பிறகு இரவில் தூறிக்கொண்டே இருந்தது. திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை  பொறுத்தவரை இன்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் வெயில் வருவதும், மறைவதுமாக இருந்தது. வேதாரண்யத்தில் இன்று காலை சிறிது நேரம் தூறியது.

மீனவர்கள் ஓய்வு
கடல் சீற்றமாக இருப்பதால் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, ெவள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மகாதேவி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பைபர் படகு மீனவர்கள் சுமார் 3,000 பேர் இன்று 2வது நாளாக கடலுக்கு  செல்லவில்லை. படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் சுமார் 3,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

மின்சாரம் தாக்கி பெண் பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நீர்விளங்குளத்தை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவரது மனைவி சவுந்திரவள்ளி(40). மகள் இலக்கியா(8). 3ம் வகுப்பு மாணவி. நேற்று மாலை அந்த பகுதியில் பரவலாக மழை பெய்தது. அப்போது  சவுந்திரவள்ளி வீட்டிற்கு வெளியே வந்த போது, மின்ஒயர் அறுந்து கிடந்தது. அதை சவுந்திரவள்ளி மிதித்ததால், தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்த இலக்கியாவும் ஓடி வந்து தாயை தொட்டதால், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 2 பேரையும்  அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சவுந்திரவள்ளி சிகிச்சை பலனின்றி இறந்தார். இலக்கியா சிகிச்சை பெற்று வருகிறார்.

மழை அளவு
இன்று காலை 7 மணி வரை முக்கிய இடங்களில் பதிவான மழை அளவு(மிமீ): வலங்கைமான் 47.4, முத்துப்பேட்டை 32, உடையாளிப்பட்டி 72.20, திருமயம் 54.80, புதுக்கோட்டை 51.40, கந்தர்வகோட்டை 53, ஆதனக்கோட்டை 40, பெருமகளூர் 38,  ஆயிங்குடி 45.40, அன்னவாசல் 31, இலுப்பூர் 20, நாகுடி 22.20, கீழாநிலை 17.40.

Tags : Fishermen ,Delta Fishermen ,sea , Fishermen go out to sea in Delta
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்