×

அரசு கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம், திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம்: அரசு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மாணவர்களும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலை கல்லூரி, திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி கலை கல்லூரி, திருவள்ளூர் பல்கலைக்கத்துடன் இணைந்த அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தை ரூ.68-லிருந்து ரூ.100 வரை உயர்த்தப்பட்டது. அதேபோல, முதுநிலை மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரூ. 250-லிருந்து ரூ.500 வரை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து ஆய்வு கட்டணங்கள் ரூ.80-லிருந்து ரூ.250 வரை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் கடந்த 2 நாட்களாக சுமார் 3000-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், போராட்டத்தை தூண்டியதாக கூறி 13 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, இன்று திண்டிவனம் கோவிந்தசாமி அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் சென்னை- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு கலை கல்லூரிகளில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வந்தபோதே, மாணவர் அமைப்புகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையாக மனு அளித்துள்ளனர். இந்த கட்டண உயர்வு மிகவும் அதிகமானது என்றும், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகமும், பல்கலைக்கழகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் 3ம் நாளாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்றைய தினம், திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின்போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஒரு மாணவரின் சட்டை கிழிந்ததால் பரபரப்பு நிலவியது. இது சம்பவம் தொடர்பாக மாணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags : Thiruvannamalai ,Villupuram ,Government College ,Thiruvannamalai Govt , Government College, fee hike, Villupuram, Thiruvannamalaimana, struggle
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...