×

மாநகராட்சியில் 78 இடங்களில் நுண் உரம் தயாரிப்பு பணி முடக்கம்: ரூ.50 கோடி திட்டம் வீணாகிறது

கோவை: கோவை மாநகராட்சியில் 78 இடத்தில் நு்ண் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணி முடங்கியுள்ளது. கோவை நகரில் தினமும் சுமார் 980 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கு கொண்டு செல்வதிலும், அங்கே மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 15 லட்சம் டன் குப்பைகள், 650 ஏக்கர் பரப்பில் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதால் வெள்ளலூர் சுற்றுப்பகுதி புகை மண்டலமாகி மாறி மக்கள் மூச்சு திணறி தவிக்கவேண்டிய நிலையிருக்கிறது.

இதை தவிர்க்க, நகரில் பல்வேறு வார்டுகளில் 78 இடத்தில் நுண் உரம் தயாரிப்பு மையம் (மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்) அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி 32வது வார்டில் 69 லட்ச ரூபாய் செலவில் உர மையம் துவக்க அனுமதி வழங்கப்பட்டது. காளப்பட்டி வையாபுரி நகர், ஜி.வி ரெசிடென்சி, ராமானுஜம் நகர், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, சர் சண்முகம் ரோடு, தடாகம் ரோடு வாழைக்காய் மண்டி, ஜீவா நகர், வி.என்.ஆர் நகர், சுண்டப்பாளையம் மயானம், அண்ணா நகர், பாரதி பார்க் ரோடு, ராமசாமி நகர், துடியலூர் மார்க்கெட், வளர்மதி நகர், விஜி ராவ் நகர், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே கால கட்டத்தில் உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உரம் தயாரிப்பு பணிகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை. கவுண்டம்பாளையத்தில் பரிட்சார்த்த அடிப்படையில் பெயரளவிற்கு உரம் தயாரிப்பு பணி நடக்கிறது. ஐஓபி காலனி, குருசாமி நகர், ஓணப்பாளையம் உட்பட 12 இடங்களில் இயந்திரங்கள் மற்றும் கூடங்கள் முழு அளவில் தயார் செய்தும் பணிகள் நடக்கவில்லை.

ஒவ்வொரு மையத்திற்கும் மாநகராட்சி நிர்வாகம் தலா 69 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடத்த உத்தரவிட்டது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில் உரம் தயாரிப்பு கூடம் அமைத்து ஒப்பந்த நிறுவனங்களுக்கான பில் தொகை வழங்கப்பட்டது. உரம் தயாரிப்பு பணிக்கு தனியாக ஒப்பந்தம் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இயக்கி பராமரித்தல் என்ற வகையில் தனியார் நிறுவனம் மூலமாக உரம் தயாரிப்பு பணி நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நகரில் பல்வேறு இடங்களில் நுண் உரம் தயாரிப்பு கூடத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உரம் தயாரிப்பு கூடம் குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைக்க மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். குப்பைகளை உரமாக மாற்றும் போது துர்நாற்றம் அதிகமாகும். ஈ, கொசு, செல் பூச்சி தொல்லை அதிகமாகி வருகிறது. பூச்சிகளை அழிக்க, நாற்றம் போக்க மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பிரிவினர் கூறுகையில், ‘‘ ஒவ்வொரு கூடத்திலும் மாதம் 5 டன் மக்கும் குப்பை உரம் தயாரிக்க, அதை மாநகராட்சி பூங்கா, ரோட்டோர பூங்கா பகுதியில் மரம், செடிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் காலத்தில் உரத்தை விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அனைத்து பகுதியிம் உரம் தயாரிப்பு பணியை வெற்றிகரமாக முடிக்க தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேறினால், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு செல்லும் குப்பை அளவு கணிசமாக குறையும், ’’என்றனர்.

Tags : Micro fertilizer production shutdown ,city ,locations , Fertilizer preparation
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு