×

தனியார் கார் பார்க்கிங் சார்பில் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் அத்துமீறி வைக்கப்பட்ட தடுப்புகள்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வீதியில், தனியார் கார் பார்க்கிங் நிறுவனத்தால் அத்துமீறி வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும், பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் கோட்டை ரோட்டில் புராதன சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு 18 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்கள் எந்த நேரமும் சுவாமியை தரிசனம் செய்வதற்கேற்ப, கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 24 மணி நேரமும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். கோயிலை சுற்றி 3 வீதிகள் உள்ளன. கார்களில் வரும் பக்தர்கள், வீதிகளின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு கோயிலுக்கு வருகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பகுதியில் நிறுத்தப்படும் கார்களால், கோயில் அமைந்துள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதை தடுக்க, முக்கிய நாட்களில் போலீசார் கோட்டை ரோட்டில் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விடுவார்கள். மேலும், ஆஞ்சநேயர் கோயிலை சுற்றிலும் கார்களை நிறுத்துவதை தடுக்க, உழவர்சந்தை அருகில் நகராட்சி சார்பில் கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பார்க்கிங் ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்கு அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும் என்பதால், பெரும்பாலான பக்தர்கள், காரை கோயிலுக்கு அருகிலேயே நிறுத்தி விட்டு சென்று விடுவார்கள். இதனால் கார் பார்க்கிங் டெண்டர் எடுத்தவர்கள், கோயிலுக்கு அருகாமையில் நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் வசூலித்தனர். இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக, கோயில் அருகில் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியாமல் போனது.

விடுமுறை நாட்களில் அதிகமான கார்கள் நிறுத்தப்படுவதால், அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியே கூட வரமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஆஞ்சநேயர் கோயிலுக்கு பின்புறம் உள்ள சுமார் 1 ஏக்கர் நிலத்தில், தனியார் ஒருவர் கார் ஸ்டாண்ட் அமைத்துள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு சென்று, காரை நிறுத்துகிறார்கள். இதற்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயிலுக்கு அருகாமையில் இந்த பார்க்கிங் இருப்பதால், தற்போது குடியிருப்புகள் முன் கார் நிறுத்துவது குறைந்துள்ளது. ஆனால், பிரச்னை வேறு ரூபத்தில் வந்துள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும், இரும்பு பேரல்களை ரோட்டின் குறுக்கே வைத்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் தனியார் நிறுவன செக்யூரிட்டி ஒருவரையும் நியமித்து, காரில் வரும் பக்தர்களை தனியார் பார்க்கிங்கிற்கு செல்லும்படி கட்டாயப்படுத்தி வருகிறார்கள். அதே வேளையில், நகராட்சி மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல், இந்த கார் பார்க்கிங் அமைந்துள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கோயிலில் முக்கிய விழாக்கள் நடக்கும் நாட்களில், கூட்டம் அதிகமாக இருந்தால் பக்தர்கள் தனியார் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று, காரை நிறுத்துவார்கள். ஆனால், தினமும் வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களையும், கோயிலுக்கு அருகில் உள்ள சாலைகளில் காரை நிறுத்த விடாமல், தனியார் பார்க்கிங் தான் செல்லவேண்டும் என கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

கார் பார்க்கிங் அமைத்துள்ள நிறுவனம், காவல்துறையின் அனுமதியின்றி, ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் வீதி முழுவதும், பேரல்களை ரோட்டின் குறுக்கே வைத்து, தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தனியார் கார் பார்க்கிங் நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், காவல்துறையினரும், கோயில் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். இதனால் கோயிலை சுற்றி தினமும் தேவையற்ற பதற்றங்கள் உருவாகி வருகிறது.

Tags : Anjaneyar Temple Road ,Namakkal ,Anjaneyar Temple , Namakkal, Anjaneyar Temple
× RELATED பொதுக்கூட்டம் நடத்த 48 மணி நேரத்துக்கு முன் அனுமதி அவசியம்