×

இலவச வெள்ளாடு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக முற்றுகை: மயிலாடும்பாறையில் பரபரப்பு

வருசநாடு: இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி மயிலாடும்பாறை கால்நடை மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட கருப்பையாபுரம், உப்புத்துறை, ஆட்டுபாறை, தொப்பையாபுரம் அருகுவேலி, தாழையூத்து, கருமலைசாஸ்தாபுரம் உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா வெள்ளாடு திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் வெள்ளாடு வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மயிலாடும்பாறை கால்நடை மருத்துவமனையை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், 212 ஆடுகளுக்கு ஆளுங்கட்சி தரப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் பரிந்துரை செய்துள்ளனர். வறுமைக்கோடு, விதவை போன்ற அடிப்படையில் வாழும் மக்களுக்கு வெள்ளாடு திட்டம் பயனளிக்கவில்லை என்றனர். கருப்பையாபுரத்தை சேர்ந்த கருப்பையா கூறுகையில், கடமலை - மயிலை ஒன்றியத்தில் மேகமலை, முறுக்கோடை, முத்தாலம்பாறை உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளுக்கு ஆடு, மாடு கேட்டு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆனால், அதில் முறையாக பட்டியல் தயார் செய்யப்படவில்லை. ஏழை எளியவர்களை விட்டுவிட்டு வசதி படைத்தவர்கள் மட்டும் பயன் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஆளுங்கட்சியை சார்ந்தவர்களே திட்டத்தை பயன்படுத்தி உள்ளனர். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தகவலறிந்த மயிலாடும்பாறை கால்நடை மருத்துவர் சுதர்சனம், கால்நடை ஏடி சுப்பிரமணி, மயிலாடும்பாறை காவல்துறை எஸ்ஐ ஜெயபாலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Mayiladuthurai Varshanad , Varshanad, Free Goat Project
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...