×

தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம் பகுதியில் கடல் சீற்றம்: தடையை மீறி ஜெட்டி பாலத்தில் சுற்றுலாப்பயணிகள் ‘பகீர்’ செல்பி

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், ஜெட்டி பாலத்தில் தடையை மீறி சுற்றுலாப்பயணிகள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று பலத்த காற்று வீசிய நிலையில் கடலும் கொந்தளிப்பாக இருந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம் தென்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலோரத்தில் அலைகளும் அதிக சீற்றத்துடன் கரையேறியது. முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் படகுகள் நிறுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள ஜெட்டி பாலத்தின் மேல், கடல் சீற்றத்தினால் உருவாகும் அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதுவதால் 20 அடி உயரத்திற்கு கடல்நீர் எகிறியடித்தது.

ஜெட்டி பாலம் முழுவதும் கடல்நீர் வந்து செல்லும் ஆபத்தான நிலையில், சுற்றுலாப்பயணிகள் சர்வசாதாரணமாக பாலத்தில் நின்று செல்பி எடுத்து விளையாடுகின்றனர். ஜெட்டி பாலத்திற்கு முன்பு சுற்றுலாப்பயணிகள் யாரும் செல்லாத வகையில் மரக்கம்புகளால் தடுப்புகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று கடல் சீற்றமான நேரங்களில் இத்தடையை தாண்டி சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் மரத்தடுப்பு, போலீசாரின் எச்சரிக்கையை மீறி பெண்கள், குழந்தைகள் என சுற்றுலா பயணிகள் சர்வசாதாரணமாக ஜெட்டி பாலத்திற்கு சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜெட்டி பாலத்தின் ஓரத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் கடலில் தவறி விழுந்து பலியானார். இதுபோல் அபாயத்தை உணராமல் விளையாட்டுப்போக்கில் கடலில் தவறி விழுந்து உயிர்ப்பலியாவது இக்கடல் பகுதியில் தொடர்ந்து வருகிறது. நேற்றும் பலத்த காற்று வீசியபோது ஜெட்டி பாலத்திற்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் பலர் தடுப்புகளை தாண்டி சென்று படம் பிடித்து விளையாடினர்.

இப்பகுதி மீனவர்கள் கூறும்போது, ‘‘போலீசார் எச்சரித்தாலும், கடலின் அபாயம் குறித்து நாங்கள் கூறினாலும் அதையெல்லாம் சுற்றுலாப்பயணிகள் மதிப்பதில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு நடந்து கொள்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் அழுது புலம்புகின்றனர். ஆனால் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு யார் சொல்வதையும் மதிப்பதில்லை. போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து காற்று கடல் சீற்றமான நேரத்தில் ஜெட்டி பாலத்தில் சுற்றுலாப்பயணிகள் செல்வதை தடுத்திட வேண்டும்’’ என்றனர்.

Tags : Dhanushkodi ,sea , Dhanushkodi, selfie
× RELATED தொடர் கடல் சீற்றத்தால் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை