×

ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: டிரம்ப் சூசகம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு சாதகமான சில முக்கிய அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் வெளியிடுவார் என தெரிகிறது. அதை அவரே சூசகமாக நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு ஒரு வார பயணமாக நாளை செல்கிறார். இவரை வரவேற்பதற்காக, ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கலிபோர்னியாவில் இருந்து நேற்று வாஷிங்டன் புறப்பட்ட அதிபர் டிரம்பிடம், ‘ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவீர்களா?’ என நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த டிரம்ப், ‘‘இருக்கலாம். பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதாக  அறிவிக்கப்பட்டவுடன், அங்கு கூடும் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்,’’ என்றார். ஹூஸ்டன் சந்திப்புக்கு முன், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் முயற்சியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக சலுகை சம்பந்தப்பட்ட அறிவிப்பை, ‘ஹவ்டி மோடி’ கூட்டத்தில் டிரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 மாதத்தில் 4 முறை சந்திப்பு
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நாளை மறுநாள் அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்கிறார். அதன்பின் இருவரும் நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே சந்தித்து பேசவுள்ளனர். ஒரே வாரத்தில் இரு தலைவர்களும் 2 முறை சந்தித்து பேசவுள்ளனர். கடந்த மே மாதம் பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜப்பானில் நடந்த டி-20 மாநாடு, பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இப்போது, மேலும் 2 முறை சந்திக்க உள்ளார். 4 மாத காலத்தில் அமெரிக்க அதிபரை, இந்திய பிரதமர் 4 முறை சந்திப்பது இதுவே முதல் முறை.


Tags : India ,Howdy Modi: Trump India ,Howdy Modi , Howdy Modi, India, Trump
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...