கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் ஓட்டம்: அம்பத்தூர் பகுதியில் பரபரப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கருக்கு, டி.டி.பி காலனியில் மழைநீருடன் கலந்து தேங்கிய கழிவுநீரை கொரட்டூர் ஏரியில் விடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம், மங்களபுரம், மண்ணூர்பேட்டை, அத்திப்பட்டு, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், அம்பத்தூர் அடுத்த கருக்கு, டி.டி.பி காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும், தெருக்களில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, வீடுகளை சுற்றி மழைநீருடன் கலந்து தேங்கிய கழிவுநீரை கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரியில் வெளியேற்ற முடிவு செய்தனர். இதற்காக, ஏரிக்கரையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து கழிவுநீரை உள்ளே விடுவதற்கு முயன்றனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஏரியில் கழிவுநீரை விடக்கூடாது என்றும், 2016ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயத்தில் தடை உத்தரவு உள்ளது என்றும் அதிகாரியிடம்  தெரிவித்தனர். மேலும், எக்காரணம் கொண்டும் ஏரியில் கழிவுநீரை விட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பால் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் ஏரிக்கரையை உடைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் பகுதிகளில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக சீரமைக்கவில்லை. இந்த கால்வாய் வழியாக தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன கழிவுகள் விடப்படுகிறது. இந்த கழிவுநீர் தான் பல ஆண்டாக கொரட்டூர் ஏரியில் கலந்து வந்தது. இதனை கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயம் சென்று தடுத்து நிறுத்தினர். மேலும், பல இடங்களில் மழைநீர் கால்வாய் பணிகள் முற்று பெறாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனை செய்ததாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர். மேலும், மழைநீர் கால்வாய்களை முறையாக சீரமைத்தால், மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்க வழியில்லை.

கடந்த இரு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவையும் மீறி மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுநீரை கொரட்டூர் ஏரியில் விட்டனர். தற்போதும் ஏரி கரையை உடைத்து கழிவுநீரை உள்ளே விட முயற்சி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கழிவுநீரை மறுசுழற்சி செய்து ஏரியில் விட்டால் நீர்மட்டமும் உயரும், கொரட்டூர் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் பிரச்சினையும் இருக்காது. அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

More
>