விக்ரம் லேண்டருடன் தொடர்பு கிடைக்காது : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு: நிலவை ஆய்வு செய்வதற்கான விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் கடந்த 7ம் தேதி தரை இறங்கும்போது, அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.  ஆர்பிட்டரின் உதவியால் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் விஞ்ஞானிகளால் அதனிடம் இருந்து தகவலை பெற முடியவில்லை. அமெரிக்காவின் நாசாவும் தன் பங்கிற்கு லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. லேண்டரின் ஆயுட்காலம், 14 நாள் மட்டுமே. ஆனாலும் நேற்று வரை இதில் சாதகமான எந்த தகவலும் இஸ்ரோவுக்கு கிடைக்கவில்லை. எனவே, இனிமேல் தொடர்பு கிடைக்காது என்ற முடிவுக்கு இஸ்ரோ வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து டிவிட்டரில் இஸ்ரோ அதிகாரிகள், “எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்த இந்தியர்கள் அனைவருக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம். இந்தியா மட்டும் இன்றி உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் நம்பிக்கையாலும் கனவுகளாலும் நாங்கள் உத்வேகத்துடன் முன்னோக்கி செல்வோம். விண்ணையே எங்களுக்கு இலக்காக அமைத்து கொள்வதற்கு ஊக்கம் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி’’  என கூறியுள்ளனர். ஆராய்கிறது நாசா:  நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் நாசாவின் எல்.ஆர்.ஓ ஆர்பிட்டர், விக்ரம்  லேண்டர் தரையிறங்கிய தென்துருவ பகுதியை கடந்த 17ம் தேதி மாலை இருள் சூழும்  நேரத்தில் கடந்து சென்றது. அப்போது, சில படங்களை அது எடுத்தது. அந்த  படங்களை நாசா ஆய்வு செய்து வருகிறது.

Tags : scientists ,Vikram Lander ,ISRO , No contact , Vikram Lander,ISRO scientists
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் புற்கள் : பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்