×

தயாரிப்பது, விற்பது உட்பட அனைத்தும் குற்றம் இ-சிகரெட்டுக்கு தடை விதித்து மத்திய அரசு அவசரச் சட்டம்

* 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை

புதுடெல்லி: இ-சிகரெட்டுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதன் மூலம், இ-சிகரெட்டை தயாரிப்பது, விற்பனை, இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் விளம்பரம் செய்வது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட உள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. ‘இ-சிகரெட்டை பயன்படுத்துவதால் மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது,’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இ-சிகரெட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது. இதில், இ-சிகரெட்டை பயன்படுத்துவது, தயாரிப்பது, விற்பனை செய்வது, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது, விளம்பரம் செய்வது போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  

இதன் மூலம், இந்த தடையை முதல் முறையாக மீறுபவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். குற்றத்தை தொடர்ந்து செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இ-சிகரெட்டை பதுக்கி வைத்திருந்தாலே 6 மாதம் சிறை தண்டனை அல்லது 50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இ-சிகெரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தால், அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்யலாம்.
அதனால், இ-சிகெரட் இருப்பு வைத்திருப்பவர்கள், அது குறித்த விவரங்களை பட்டியலிட்டு அருகில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் மற்றும் வியாபாரிகள் கடுமையாக விமரித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘சிகரெட்டுக்கு மாற்றாக இ-சிகரெட்டுகள் இருந்து வந்தன. சிகரெட் கம்பெனிகளை பாதுகாப்பதற்காக, அவசரச் சட்டம் மூலம் அராஜக நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது,’’ என்றனர். இ-சிகெரட் புகைப்பவர்களின் சங்கத்தினர் (ஏவிஐ) கூறுகையில், ‘‘பாதுகாப்பான முறையில் இ-சிகெரெட் பயன்படுத்தி வந்த 11 கோடி இந்தியர்களுக்கு இது கருப்பு நாள்’’ என்றனர். ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘இளைஞர்களின் நலன் கருதி இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது,’’ என்றார்.

Tags : manufacturer , Federal Government Emergency Act, prohibits all criminal e-cigarettes, manufacture and sale
× RELATED முகக்கவசம் உற்பத்தி, விற்பனை தொடர்பாக...